பக்கம் எண் :

14

         “பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா
          உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்
          எண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளு மாங்கே
          வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன்
          மெலிந்துபின் னிற்குமன்றே”

எனவும் வரும், சீவகசிந்தாமணிச் செய்யுள்களும்;         (159-97)

         “மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவும்
          துன்னிடும் மனத்தின் றூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்
          பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர்ப் பெருமை பேணா
          என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே.”


எனவரும், யசோதர காவியச் செய்யுளும் (95) ஒப்புநோக்கற் பாலன.

     ஈண்டுக் கூறப்படும் இயல்பு கற்பில்லாத மகளிரினியல்பேயாகும். மற்றுக்
கற்புடை மகளிரின் மாண்பு மேலே கூறப்பட்டது.                (8)


9,            இதுவுமது

உண்டியுட் காப்புண் டுறுபொருட் காப்புண்டு
  கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு
பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக் கண்டு
மொழிந்தனர் கற்றறி்ந் தோரே.

     (இ - ள்,) கற்றறிந்தோர் - கற்றுப் பொருளியல்பினை அறிந்த
சான்றோர்; உண்டியுள் காப்பு உண்டு - மக்கள் உண்ணும் உணவுகள்
கெடாதபடி காத்துக் கோடற்கு வழியுண்டு; உறு பொருள் காப்பு உண்டு -
மிக்க பொருள்களைக் கள்வர் கவராதபடி காத்துக் கோடற்கும் வழிகள்
உளவாம்; விழுப்பொருள் கண்ட கல்விக்குக் காப்பு உண்டு - செல்வப்
பொருளினும் சிறந்ததாகவுணரப்பட்ட கல்வியறிவு மறந்துபோக தபடி காத்துக்
கோடற்கும் வழியுண்டு; பெண்டிரைக் காப்பது இலம் - ஆனால் மகளிர்
கற்பழியாமல் யாம் காத்துக்கோடற்கோ யாதொரு வழியுங் கண்டிலம்; என்று,
கண்டு மொழிந்தனர் - என்று அம்மகளிரியல்பை ஆராய்ந்து கூறியுள்ளனர்
என்பதாம்.

     (வி - ம்.) உணவினை மூடியிட்டுக் காத்தல் கூடும். பொருளைக்
கருவூலம் முதலியவற்றில் வைத்துக் காத்தல்கூடும்; கற்றவற்றை மீண்டு
மீண்டும் ஓதுமாற்றால் மறவாமற் காத்தல் கூடும். இவற்றைப்போல மகளிர்
கற்பழியாதபடி கணவன் முதலியோராற் காத்தற்கு வழியில்லை என்று
கற்றறிந்தோர் கூறியுள்ளனர் என்றவாறு.

        “சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
         நிறைகாக்குங் காப்பே தலை”  
              குறள், 57

என்பது பொய்யாமொழி.                                  (9)