பக்கம் எண் :

18

எனவரும் பொய்யில் புலவன் பொருளுரையும் நினைவிற் கொள்ளற்
பாலன. (12)


13.         அடக்கமுடைமை

ஆக்கப் படுக்கு மருந்தளைவாய்ப் பெய்விக்கும்
  போக்கப் படுக்கும் புலைநரகத் துய்விக்கும்
காக்கப் படுவன விந்திரிய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே.

     (இ - ள்.) ஆக்கப் படுக்கும் - ஒருவனுடைய நாவினிற்றோன்றுஞ்
சொல் அவனைச் செல்வ முதலிய பேறுகள் உடையவனாக உயர்த்தவும்
உயர்த்தும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும் - அல்லது உய்தற்கரிய
சிறைக்கோட்டத்துட் செலுத்தினும் செலுத்தும்; போக்கப் படுக்கும் -
அங்ஙனமே இன்ப வாழ்க்கைக் கிடமாகிய போகபூமியுட் பிறப்பித்தலும்
செய்யும்; புலை நரகத்து உய்விக்கும் - அல்லது இழிவுடைய நரகத்தின் கண்
செலுத்தினுஞ் செலுத்தும்; காக்கப்படுவன - ஆதலால் மாந்தர் தம்மறிவாற்
காத்தற் குரியனவாகிய இந்திரியம் ஐந்தினும் - பொறிகள் ஐந்துனுள்ளும்; நனி
பேணும் ஆறு - மிகவும் விழிப்புடனிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி;
நாக்கு அல்லது இல்லை - நாவினையன்றிப் பிறிதொன்றில்லை, என்பதாம்.

     (வி - ம்.)
மக்கட்கு ஆக்கந்தருவதும் நாவே. அவரைச்
சிறைக்கோட்டம் புகுவிப்பதும் அதுவே; துறக்கத்துச் செலுத்துவதும் அதுவே,
நரகத்தில் வீழ்த்துவதும் அதுவே ஆதலால், மெய் முதலிய பொறிகளுள்
நாவே பெரிதும் விழிப்புடன் பேணற் பாலது என்றவாறு.

         “யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
          சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”   
     --குறள், 127

என வரும் திருக்குறளும் நோக்குக.

         “நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
          யாநலத் துள்ளதூஉ மன்று”   
           --குறள், 941.

எனவும்,

         “ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
          காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு”  
    --குறள், 942.

எனவும்,

         “திறன்அறிந்து சொல்லுக சொல்லை யறனும்
          பொருளு மதனினூஉங் கில்”    
        --குறள், 944,

எனவும் வரும் அப்பொய்யில் புலவர் பொருளுரையும் காண்க.