பக்கம் எண் :

20

விரதங்களை மேற்கொண்டு வாழுமின்; ஊரும் நாடும் உவத்தல் ஒரு தலை -
அவ்வாறு வாழ்வீராயின் நீவி்ர் வாழு மூரேயன்றி எல்லா நாட்டு மக்களும்
நுங்கள் வாழ்வினைக் கண்டு மகிழ்வது ஒரு தலையாம்; வீரவென்றி் விறல்மிகு
விண்ணவர் - அதுவுமன்றி, வீரத்தாலுண்டாகிய வெற்றிப் பெருமைமிக்க
தேவர்களும்; சீரின் ஏத்தி - நுங்கள் புகழ் காரணமாக நும்மைப் பாராட்டித்
தொழுது; சிறப்பெதிர் கொள்ப - சிறப்ப நும்மை எதி்ர்கொண்டழைப்பர்,
என்பதாம்.


     (வி - ம்.)
தாரம் - மனைவி ஈண்டு அறநெறியால் மணந்துகொண்ட
மனைவிமார் என்க.
“அறமனை காமின் அல்லவை கடிமின்” என
இளங்கோ
வடிகளாரும் அறிவுறுத்துதல் உணர்க. நல்வதம் - நல்லவிரதங்கள்.
அவற்றை,

      “பெருகிய கொலையும் பொய்யும் களவொடு பிறன்ம னைக்கண்
       தெரிவிலாச் செலவு சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
       மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
       ஒருவின புலைசு தேன்க ளொருவுத லொழுக்க மென்றான்”


எனவரும் யசோதர காவியத்தாலுணர்க. இவற்றை அணுவிரதம் என்ப இனி,
இளங்கோவடிகளார்,

     “தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!
      பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின்!
      தெய்வந் தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்!
      பொய்யுரை யஞ்சுமின்! புறஞ்சொற் போற்றுமின்!
      ஊனூண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்!
      தானஞ் செய்ம்மின்! தவம்பல தாங்குமின்!
      செய்ந்நன்றி கொல்லன்மின்! தீநட் பிகழ்மின்!
      பொய்க்கரி போகன்மின்! பொருண்மொழி நீங்கன்மின்!
      அறவோ ரவைக்கள மகலா தணுகுமின்!
      பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்!
      பிறர்மனை அஞ்சுமின்! பிழையுயி ரோம்புமின்!
      அறமனை காமின்! அல்லவை கடிமின்!
      கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
      வெள்ளைக் கோட்டியும் விரகினி லொழிமின்!
      இளமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
      உளநாள் வரையா தொல்லுவ தொழியாது
      செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
      மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கு”