யுடைத்தாதல்.
எனவே, பொய் என்றாயிற்று. பொய்கூறி உய்யன்மின் எனவே
பொய்க்கரி கூறி உடலோம்ப வேண்டா! என்றவாறாயிற்றாம். பொய்யாவது -
நன்மை பயவாத நிகழாதது கூறலும். தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும்
ஆமென்க. எனவே பிறிதோருயிர்க்குத் தீங்கு பயக்கும் சொற்களைக்
கூறாதொழிக என்றவாறு, என்னை?
“வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுத்
தீமை யிலாத சொலல்” --குறள், 291
எனவும்,
“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்” --குறள், 292
எனவும் வள்ளுவர் ஓதுமாற்றால் பொய்ம்மையினியல் உணர்க.
இனி, புறங்கூறலாவது - காணாதவழிப் பிறரை யிகழ்ந்துரைத்தல். இது
பெருந்தீவினை என்பதனை வள்ளுவர் பெருமான்,
“அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது” --குறள், 181
என்பதனால், தீவினை பலவற்றுள்ளும் இது மேம்பட்டது என்பதனாலும்,
“அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை” --குறள், 182
எனவும்,
“புறங்கூறிப்
பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கத் தரும்” --குறள், 183
எனவும்,
“கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்” --குறள், 184
எனவும் வரும் மூன்று குறள்களானும் அத்தீவினையின் கொடுமையை
விளக்குதலானும் உணர்க.
வைதல் - இகழ்ந்துரைத்தல். யாரையும் என்றது - எளியோராயினும்
என்பதுபட நின்றது. வாழுநாள் செய்தல் - வாழ்நாளை வளர்த்துக் கோடல்.
தீயன்மின் - நட்புறாதேகொண்மின். இஃதோர் அருஞ்சொல் ஆயினும். இதன்
பொருள் இன்னதே என்பது, சிறியாரொடு தீயன்மின் என்றதனாற் பெற்றாம்.
‘தீயன்’ என்ற பாட வேறுபாடுள்ளது. அதனைக் கொள்ளின் தீயன
செய்யன்மின் எனக்கொள்க. சிறியார் - சிற்றினமாக்கள். அவராவார்; நல்லதன்
நலனும் தீயதன் தீமையும் இல்லை யென்போரும், விடரும்தூர்த்தரும் நடரு
முள்ளிட்ட குழு. இத்தகையோர் கேண்மை அறிவைத்திரித்து இருமையுங்
கெடுக்குமாகலின் சிறியாரொடு தீயன்மின் என்றார்.
|