பக்கம் எண் :

29

ஈறு தொக்கன ; செய்யுள் விகாரம். பொருளாக - உறுதிப் பொருளாக.
பொதிதல் - மறைத்து வைத்தல். ஓம்பல் செல்லாது - ஓம்பாமல் என்னும் ஒரு
சொன்னீர்மைத்து. அருளே மேனிலையுலகில் ஒளியுடைய வாழ்க்கை நல்கும்
உறுதிப் பொருளாக வுணர்ந்து என்க. வான் : ஆகுபெயர், மேனிலையுலகம்.
அறம் : விருந்தோம்பல் ஈதல் முதலியன. இருள் இல் இயல்பு - ஒளியுடைய
தன்மையுடைய அமரவாழ்வு. இன்னே அறஞ்செய்மின் என்பது குறிப்பெச்சம்.

       “அருட்செல்வஞ் செல்வத்துட் செலவம் பொருட்செல்வம்
        பூரியார் கண்ணு முள”
                  --குறள், 241

என்பதனால் அருட்செல்வம் பொருட்செல்வம் என்னும் இரண்டனுள்
மெய்யாய செல்வம் அருட் செல்வமே என்பதும்,

       “நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
        றேரினு மஃதே துணை”  
                --குறள், 242

என்பதனால் ஆருயிர்த் துணையாவது அருட்செல்வமே ஆதலால் அஃதே
பெறற்பாலது என்பதும், உணர்க.

       “அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
        இன்னா வுலகம் புகல்”
                  --குறள், 243

என்பதனால் அருளுடையோர் வான்கண் இருளில் இயல்பு எய்துதல்
ஒருதலை ஆகவும் அத்தகைய பேரின்ப வாழ்க்கையை நீயிர் பெற
முயலாமை என்னையோ ? என்றவாறு. இனி, பொருளால் வரும் பயன்
அருளுடையராகி ஈதலே ஆவதனை,

         “தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
          வெண்குடை நிழற்றிய ஒருமை யோற்கும்
          நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
          கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
          உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
          பிறவு மெல்லா மோரொக் கும்மே
          செல்வத்துப் பயனே யீதல்
          துய்ப்பே மெனினே தப்புந பலவே”
      --புறநா, 269

எனவரும் நக்கீரனார் மொழியானுணர்க.                      (20)


21.          புலான் மறுத்தல்

தகா துயிர்கொல் வானின் மிகாமையிலே பாவம்
  அவாவிலையி லுண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலைவி லங்காய்ப் பொறாதுபிற வூன்கொன்
றவாவிலையில் விற்பானு மாண்டதுவே வேண்டுமால்.