பக்கம் எண் :

31
22,   ஊனுண்போரின் இழிதகைமை

பிறவிக் கடலகத் தாராய்ந் துணரின்
  தெறுவதிற் குற்ற மிலார்களு மில்லை
யறவகை யோரா விடக்கு மிசைவோர்
குறைவின்றித் தஞ்சுற்றந் தின்றன ராவார்.

     (இ - ள்.) பிறவிக் கடல் அகத்து ஆராய்ந்து உணரின் -
உயிரினங்கள் பிறப்புற்றுழலாநின்ற கடல்போன்ற இப்பேருலகத்தின்கண்
ஆராய்ந்து காணுமிடத்து; தெறுவதின் குற்றம் இலார்களும் இல்லை -
பிறவுயிரைக் கொல்வதனாலுண்டாகுந் தீவினையில்லாதவர் ஒருவரேனும்
இலராவார்; அறவகை ஓரா விடக்கு மிசைவோர் - ஆயினும், அறமுறைகளே
ஆராய்ந்துணராமல் ஊன்தின்பவர்; குறைவு இன்றித் தம் சுற்றம் தின்றனர்
ஆவார் - அவருள்ளும் யாதோரவலமுமின்றித் தம்முடைய மனைமக்கள்
முதலிய சுற்றத்தாரைக் கொன்றுதின்ற அத்துணைக் கொடு வினையாளரே
யாவர் என்பதாம்.

     (வி - ம்.) உய்ந்து கரையேற ஒண்ணாதபடி விரிந்து கிடத்தலின்
பிறவியைக் கடல் என்றார். வள்ளுவனாரும் ‘பிறவாழி’ என்பதுணர்க.

     பிறவியுட்பட்டுழல்வோர் தம்வாழ்நாளில் யாதோருயிரையும் கொல்லாது
தூயராகவே வாழ்வது யாவரானும் இயலாததொன்றேயாம். உலகின்கண்
கண்ணாற் காணப்படாத சிற்றுயிர்களும் கொதுகு எறும்பு போல்வனவும்
யாண்டும் நிறைந்திருத்தலால் தெரிந்தோ தெரியாமலோ இவற்றைக்
கொல்லாதவர் யாருமிலர். அங்ஙனமிருப்பினும், ஆறறிவு படைத்த மாந்தர்
அறமுணர்ந்து கொலைவினை ஒரீஇ வாழல் வேண்டும் அன்றோ. ஊன்
உண்பவர் ‘யாவரும் கேளி்ர்’ என்னும் மெய்யுணர்வின்மையாலே தமக்கு
நெருங்கிய உறவுடைய உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊனைத்
தின்கின்றனர். இவ்வாற்றல் இவர் தம் மனைவி மக்களைத் தின்பவர் போன்று
பெருந்தீவினையாளரே என்பதில் ஐயமில்லை என்பதாம்.

        “கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
         புன்மை தெரிவா ரகத்து”
                --குறள், 309

எனவும்,

        “அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
         தந்நோய்போற் போற்றாக் கடை”
          --குறள், 318

எனவும், வரும் திருக்குறள்களையும் நோக்குக.

     “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்னும் கணியன் பூங்குன்றனார்
மணிமொழியால் எல்லாவுயிர்களும் நெருங்கிய உறவுப் பண்புடையனவே
என்பதனை யுணர்க. இம்மெய்யுணர்வின்மையால். மாந்தர் ஊன் தின்கின்றனர்
என்றிரங்கியபடியாம்.  
                                                                    (22)