பக்கம் எண் :

33

     நீயிர் ஒளியுலகில் அழகிய தேவயாக்கை பெற்றுத் திகழுவீர் என்று
அவற்றின் பயனையும் உடனோதினர். என்னை?

       “சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
        காக்க மெவனோ வுயிர்க்கு”   
              --குறள், 31

எனவும்,

       “அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
        மறத்தலி னூங்கில்லை கேடு”   
             --குறள், 32

எனவும் வரும் திருக்குறள்களையும் நோக்குக.                (23)


24.       தவத்தின் மாண்பு

பொருளோடு போகம் புணர்த லுறினும்
  அளுதல் சான்ற வருந்தவஞ் செய்ம்மின்
இருளில் கதிச்சென் றினியிவண் வாரீர்
தெருள லுறினுந் தெருண்மி னதுவே.

     (இ - ள்.) பொருளொடு போகம் புணர்தலுறினும்-நீங்கள்
நல்லாற்றினின்று பொருளீட்டுந் தொழிலி லீடுபட்டிருந்தாலும் இல்லறத்திலே
மனைவிமாரொடு இன்பம் நுகர்ந்து வாழ்வீராயினும்; ஆகுக!; அருளுதல்
சான்ற அருந்தவஞ் செய்ம்மின் - பிறவுயிர்களுக்கு அருள் செய்தலே மிக்க,
செயற்கரிய தவவொழுக்கத்தையும் மேற்கொள்ளக் கடவீர்; இருள்இல்
கதிச்சென்று - மயக்கமில்லாத உயர்பிறப்பெய்தி; இவண் இனி வாரீர் -
இந்நிலவுலகத்தே இன்னும் வந்து பிறவாப் பெருமையை எய்துவீர்; தெருளல்
உறினும் - நீங்கள் பல்லாற்றான் ஆராய்ந்து தெளிந்தாலும் ; அதுவே -
அத்தவமே முடி பொருளாம் ; தெருண்மின் - தெரிந்து கொண்மின் ;
என்பதாம்.


     (வி - ம்.)
அறநேறி நின்று பொருளீட்டுதலும் மகளிரொடு
புணர்ந்தின்புற்றிருத்தலும் தவவொழுக்கத்திற்கு இடையூறுகள் ஆகமாட்டா.
பொருள்களின்பால் பற்றின்மையும் காமவின்பத்தின்பால் அழுந்தாமையும்,
உற்றநோய் நோன்றலும் உயிர்க்குறுகண் செய்யாமையுமே மெய்யாய
தவமாகலின் இவ்வொழுக்கமுடையீராய் வாழக்கடவீர். இவ்வாழ்க்கை நும்மை
மேன்மேலும் உயர்பிறப்பிற் செலுத்தி வீடு பேற்றினையும் நல்கும் என்றவாறு,

இதனை,

       “உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
        யற்றே தவத்திற் குரு”    
                --குறள், 261

எனவும்,                                               வ,-3