அணிந்துரை
 

     சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி”
என்னும் இவ்வைந்து நூல்களையும் ‘ஐம்பெருங்காப்பியம்’ என்று கூறுவர்,
இவ்வாறு இவற்றைக் கூறுவதனை நன்னூல் மயிலைநாதருரையிற் காணலாம்,
இவ்வைம்பெருங் காப்பியங்களுன் ஒன்றாகத் திகழும் வளையாபதி என்னும்
நூல் இக்காலத்தே கிடைத்திலது. அஃது இனிக் கிடைக்கலாம் என்னும்
நம்பிக்கையும் இல்லை. ஆயினும் அதனுடைய செய்யுள் சிலவற்றைப்
பண்டைக்காலத்து உரையாசிரியப் பெருமக்கள் தத்தம் உரைக்கு மேற்கோளாக
எடுத்தாண்டிருக்கின்றனர். எனவே இவ்வாற்றான் அவ்வளையாபதிச் செய்யுள்
ஒரு சில தமக்குக் கிடைத்துள்ளன, இன்னும் புறத்திரட்டு என்னும் நூலைத்
தொகுத்த சான்றோர் இவ்வளையாபதிக் காப்பியத்தினின்றும் அறுபத்தாறு
செய்யுள்களை அந்நூலின்கட் சேர்த்துள்ளனர், இவ்விருவகையானும்
இற்றைநாள் நம் கைக்கெட்டியவை எழுபத்திரண்டு செய்யுள்களேயாம்,      

     மேற்கூறப்பட்ட செய்யுள்களினின்றும் இந்நூல் ஆருகத சமயம் பற்றி
எழுந்த நூல் என்பது புலப்படுகின்றது, இஃதன்றி இந்நூலை இயற்றிய புலவர்
பெருமான் யார் என்றாதல், இந்நூலிற் கூறப்பட்ட வரலாறு அல்லது கதை
யாது என்றாதல், யாம் அறிந்துகோடற்கு வழியில்லை. கிடைத்திருக்கின்ற
செய்யுள்களின் பண்புகொண்டு நோக்குமிடத்து இதனை இயற்றியவர் புலமைப்
பண்புமிக்க நல்லிசைப் புலவர் என்று திண்ணமாக விளங்குகின்றது. ஒப்பற்ற
புலவராகிய ஒட்டக் கூத்தர் இயற்றியருளிய தக்கயாகப்பரணியின்
உரையாசிரியர் ஓரிடத்தே “இவர் (ஒட்டக் கூத்தர்) வளையாபதியை
நினைத்தார் கவியழகு வேண்டி” என்று குறிப்பிட்டிருத்தலும் இவ்வளையாபதி
செய்யுளழகு நிரம்பிய இனியதொரு காப்பியம் என்பதனை வலியுறுத்துகின்றது.

     இனி, அடியார்க்குநல்லார் இளம்பூரணர் முதலிய உரையாசிரியப்
பெருமக்கள் இவ்வளையாபதிச் செய்யுளை மேற்கோளாக எடுத்திருப்பதனாலும்
இந்நூல் தமிழ்மரபு இழுக்காதியன்றதொரு நல்லிலக்கியம் என்பதனை
அறிவுறுத்துகின்றது; சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அரும்பத
உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இவ்வளையாபதியை ஐந்திடங்களிலே
குறிப்பிட்டிருக்கின்றனர். அரும்பதவுரையாசிரியர் கானல் வரியில் 12 ஆம்
செய்யுள் அரும்பதவுரையில் “’நீன் கடலிடை யலவன் வழி யுழுவா’ என
‘வளையாபதி’யினுங் கூறினர்” எனவும், அடியார்க்கு நல்லார்
கனாத்திறமுரைத்த காதையில் 125: விளக்கத்தில் “பாசண்டம் தொண்ணூற்
றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை; என்னை? ‘பண்ணாற் றிறத்திற்
பழுதின்றி மேம்பட்ட, தொண்ணூற்றறுவகைக் கோவையும் வல்லவன், விண்ணா
றியங்கும் விறலவ ராயினும், கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்’ என்றார்,
வளையாபதியினுமாகலின்”