பக்கம் எண் :

35


         
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்களரி வையரோ
            டனுபவித்தங் கிருத்திடினு மகப்பற்றற் றிருப்பர்
         நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலு
            நுழைவர்பிறப் பினின்வினை கள்துங்கி டாவே”

எனவும் வருகின்ற சிவஞான சித்தியார் (287) முதலியவற்றாலும்,
உணர்க.
                                             (24)


25.             இதுவுமது

தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல தரிதே
  மயக்குநீங்குதல் மனமொழி யொடுமெயில் செறிதல்
உவத்தல் காய்தலொ டிலாதுபல் வகையுயிர்க் கருளை
நயத்து நீங்குதல் பொருடனை யனையது மறிநீ.

     (இ - ள்.) தவத்தின்மேல் உறை - தவவொழுக்கத்தின் மட்டுமே நின்று
உயிர் வாழ்தல் ; தவத்து இறை தனக்கு அலகு அரிது -
அத்தவவொழுக்கத்திற் கெல்லாம் தலைவனாயிருக்கின்ற அருகக்
கடவுளுக்குக் கைகூடுவதல்லது நம்மனோர்க்கு மிகவும் அரியதொரு
செயலேயாகும் ; ஆயினும், நம்மனோர்க்குத் தவமாவது ; மயக்கு நீங்குதல -
மயக்கம் நீங்கிப் பொருளியல் புணர்தலும்; மனம் மொழியொடு மெயில்
செறிதல் - மனமும் மொழியும் உடம்புமாகிய மூன்று கருவிகளையும் அடக்கி
அறமாகிய சிறைக் கோட்டத்தின் கண்ணிருத்தல்; உவத்தல் காய்தலொடு
இலாது- விரும்புதலும் வெறுத்தலுமாகிய குணங்களோடிராமல்; பல்வகை
உயிர்க்கு அருளை நயந்து-பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களிடத்தும்
அருள் கூர்தலையே விரும்பி; பொருள் தனை நீங்குதல் - பொய்ப்
பொருள்களின்பாற் பற்றுவையாது ஒழிதல்; அனைத்தும் நீ அறி - ஆகிய
இவற்றை மேற்கோடலே யாம். அத்தவத்தினையும் நீ நன்குணர்ந்து கொள்ளக்
கடவை! என்பதாம்.

     (வி - ம்.) தவம் செயற்கரிய தொன்றெனக் கருதி அதனை
விட்டுவிட வேண்டா! தவத்தோர்க்குக் கூறப்பட்ட முழுவிலக்கணங்களும்
தவத்தோர்க்கெல்லாம் இறைவனாகிய அருகக் கடவுளுக்கே பொருந்துவதாம்.
ஆயினும், அஃது அருமையுடையத்தென்று அசாஅவாமை வேண்டும்.
அத்தவம் நம்மனோர் ஆற்றுமளவிற்கு எளியதூஉமாம். அஃதாவது--

     பொருளல்லவற்றைப் பொருளாகக் கருதும் மயக்கம் நீங்குதலும்,
மனமொழி மெய்களை அடக்கித் தீதொரீஇ நன்றின்பாலுய்த்தலும், விருப்பு
வெறுப்பற்றிருத்தலும், பொய்ப் பொருள்களைப் பற்றிக் கிடவாமையும்,
எவ்வுயிர்க்கும் அருளுடையராயிருத்தலும் ஆகிய இவ்வொழுக்கமே
நம்மனோர்க்குத் தவமாம். ஆதலால் இவற்றை மேற்கோடல் யாவர்க்கும்
கூடும் அன்றோ என்றவாறு.