பக்கம் எண் :

43

     இனி, புக்கே கிடப்பர் என்றது, நல்லாடவர்க்குரிய அறக்கடமைகளைக்
கைவிட்டு அப்புன்மகளிர் இல்லில் நுழைந்து சோம்பித் துயின்றுகிடப்பர்
எனபதுபட நின்றது இங்ஙனம் கொள்வதெல்லாம் சொல்லாற்றலாற் போந்த
பொருள் என்றுணர்க.

     துற்றூண்: வினைத்தொகை துற்றுதல் - உண்ணல். அழுவர்
என்றமையால் அம்மகளிராற் புறக்கணிக்கப்பட்டபொழுது என்பது பெற்றாம்.

     நற்றோள் என்றது குறிப்பு மொழி; இடக்கரடக்கல்;

     நாடறி துன்பம் என்றது அழுதலும் குஞ்சலிலாமையும் முதலியன நாடு:
ஆகுபெயர். ஆதலால் அம்மகளிர் கேண்மை யொழிக! என்பது குறிப்பெச்சம்.
‘அழிவர்’ என்பதும் பாடம்.                                   (29)


30.         இதுவுமது

அரசொடு நட்டவ ராள்ப விருத்தி
  அரவொடு நட்டவ ராட்டியு முண்பர்
புரிவளை முன்கைப் புனையிழை நல்லார்
விரகில ரென்று விடுத்தனர் முன்னே.

     (இ - ள்) அரசொடு நட்டவர்-கேண்மை கோடற்கியலாத வேந்தரோடு
கேண்மை கொள்வோர், விருத்தி ஆள்ப-அவ்வேந்தர் உவந்து வழங்கும்
வாழ்வூதியத்தைப் பெற்றின்புறுதல் கூடும் ; அரவொடு நட்டவர் - அஞ்சுதகு
பாம்போடு பழகுவோர் தாமும் ; ஆட்டியும் உண்பர் - அப்பாம்பினை
ஆட்டுந் தொழிலால் வருவாய் பெற்று உண்டு மகிழ்தல் கூடும் ; புரிவளை
முன்கைப் புனை இழை நல்லார் - முறுக்குடைய சங்கவளையணிந்த
முன்கையினையும் அணிகின்ற அணிகலன்களையுமுடைய புல்லிய
ஒழுக்கமுடைய மகளிரோ ; விரகு இலர் - நல்வாழ்க்கைக்குச் சிறிதும்
ஊதியமாதலிலர்: என்று முன்னே விடுத்தனர் - என்றுணர்ந்து சான்றோர்
பண்டுதொட்டே அவர் கேண்மையைக் கைவிட்டொழிந்தனர் - என்பதாம்.

     (வி - ம்.) அரசர்பாலும் பாம்பினிடத்தும் கற்பிலா மகளி்ர்பாலும்
கேண்மை கோடல் தீங்கு பயப்பதாம். ஒரோவழி அரசரோடு கேண்மை
கொள்பவர் அகலாது அணுகாது தீக்காய்வார் போல விழிப்புடன் ஒழுகின்
அவ்வரசனால் ஊதியம்பெற்று இன்புறுவர். பாம்போடு விழிப்புடன்
பழகுவோரும் அதனை ஆட்டி வருவாய் பெற்று வாழ்தல் கூடும். கற்பிலாக்
கயமகளிரோடு கேண்மைகொள்வார்க்குக் கேடு விளைவது ஒருதலை ஒரு
சிறிதும் அம்மகளிர் ஆக்கஞ் செய்வாரலர் என்பதாம். இக்கருத்தினை,

         “பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
          லேதில் பிணந்தழீஇ யற்று”
          
     --குறள்,193

எனவும்.