எனவும்,
ஆய்ச்சியர் குரவையில் 11 ஆம் அடி விளக்கத்தில்
“கொன்றைப்பழக்குழற் கோதையர்” என்றார் ‘வளையாபதியினும்’ எனவும் 20
ஆம் அடியுரை விளக்கத்தில் “’அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகல்,
கன்றின் குரலும் கறவை மணிகறங்கக், கொன்றைப் பழக்குழற்
கோவலராம்பலும், ஒன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும்’ என
வளையாபதியுள்ளும் கருவி கூறிப் பண் கூறுதலானும்” எனவும் கூறியிருத்தல்
உணர்க,
இனி, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இளம்பூரண அடிகளார் 407
ஆம் நூற்பாவிற்கு ‘உலகம்...என்றியான்’ என இவ்வளையாபதிச் செய்யுளை
மேற்கோளாகக் காட்டுகின்றார். “யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர் இச்
செய்யுளையும், “நீல நிறத்தனவாய்...நெஞ்சே” எனவும், “வித்தகர் -- நெஞ்சே’
எனவும் வரும் செய்யுள்களையும் மேற்கோளாக எடுத்துள்ளனர்.
இனி, திருக்குறளில் ஆசிரியர் பரிமேலழகரும்,
“இனம்போன்
றினமல்லார் கேண்மை மகளி்ர்
மனம்போல வேறுபடும்”
(குறள் 822)
என்னுந்
திருக்குறள் விளக்கவுரையின்கண் “அவர் மனம் வேறுபடுதல்,
‘பெண்மனம் பேதின் றொருப்படுப்பேனென்னும். எண்ணிலொருவன்.’
என்பதனானும் அறிக” என இவ்வளையாபதிச் செய்யுளை மேற்கோள்
காட்டலுமுணர்க.
மேற்கூறியவற்றால் இவ்வளையாபதி என்னும் பெருங்காப்பியத்தைத்
தமிழகத்துச் சான்றோர் அனைவரும் பெரிதும் விரும்பிப் பயின்று வந்தனர்
என்பது விளங்கும்.
புறத்திரட்டினைத்
தொகுத்த புலவர் காலம் வரையில் இவ்வளையாபதி
இத்தமிழகத்தில் முழுவுருவத்துடன் இருந்திருத்தல் வேண்டும் என்று
தோன்றுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நூல் முழுதும் கிடைக்கப்
பெறாமை தமிழரின் தவக்குறைவே என்பதில் ஐயதில்லை. ஆயினும் இற்றை
நாள் கிடைத்துள்ள இச் செய்யுள்களையேனும் பாதுகாத்து நந்தம் வழித்
தோன்றல்களுக்கு வழங்குவது நமது கடமையாகும் என்பது கருதியும்
அரிதுணர் செய்யுள்களாகிய இவற்றிற்கு உரையும் எழுதி வெளியிடுதல்
தமிழர்க்கு ஆக்கமாம் என்று கருதியும் சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தார் அடியேனைக் கருவியாகக் கொண்டு அப்பணியை இந்நூல்
வெளியீட்டின் வாயிலாய் இனிதே நிறைவு செய்கின்றனர்.
வாழ்க நங்கன்னித் தமிழ் !
இங்ஙனம்,
உரையாசிரியன்
பொ.
வே சோமசுந்தரன்
|