பக்கம் எண் :

46

     இனி, பொய்யாமையும் ஓர் அறமாகவும் அஃதின்றி எவ்வறஞ்
செய்யினும் பயன்படாமை கருதி அதனைத் தனித்தெடுத்து முற்படவோதி
துனையவற்றைத் தொகுத்துக் கூறினார். என்னை?

     “மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
      னாகுல நீர பிற”                  
   --குறள், 36

எனவரும் பொய்யாமொழியும் காண்க.

     வைகல் அறநெறி ஆற்றுமின் என மாறுக. என்னை?

     “வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
      வாழ்நாள் வழியடைக்குங் கல்”
          --குறள், 38

என்பதூஉம் காண்க.

     அறம் ஆற்றுமின் என்புழி அறம் - விருந்தோம்பன் முதலியன.

     மனத்தின்கண் மாசிலராய் அறஞ் செய்து வாழ்வோர்
இம்மையினும் இனிது வாழ்வர்; மறுமையினுந் துறக்கம் புகுவர் என்பார்.
வேதனை வந்துறலின்றிக் கௌவையிலுலகு எய்துதல் கண்டதே என்றார்.
இதனை,

     “சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறந்தினூஉங்
      காக்க மெவனோ வுயிர்க்கு”
             --குறள், 31

எனவருந் திருக்குறளானுமுணர்க.

     கண்டது என்றது திறவோராற் காணப்பட்ட உண்மை என்பதுபட
நின்றது.                                        (32)


33.          இதுவுமது

கல்வி யின்மையுங் கைப்பொருள் போகலு
  நல்லில் செல்லல்க ளானலி வுண்மையும்
பொய்யில் பொய்யொடு கூடுதற் காகுத
லைய மில்லை யதுகடிந் தோம்புமின்.

     (இ - ள்.) பொய்யொடு கூடுதற்கு - பொய்கூறி உயிர் வாழும்
வாழ்க்கையின்கண்; கல்வி இன்மையும் - கல்வியாலுண்டாகும் அறிவுப்
பொருளில்லாமையும்; கைப்பொருள் போகலும் - கையிலுள்ள செல்வப்
பொருள் அழிவும்; நல்இல் செல்லல்களால் நலிவு உண்மையும் -
நன்மையில்லாத துன்பங்களாலே வருந்துதலும்: ஆகுதல் - உண்டாதல்;
பொய் இல்-முக்காலும் வாய்மையேயாம்: ஐயம் இல்லை - ஐயஞ் சிறிதும்
இல்லை; அது கடிந்து ஓம்புமின் - ஆதலால் - அப் பொய் கூறுதலை
ஒழித்து நும்மைப் பாதுகாத்துக் கொள்வீராக! என்பதாம்.