பக்கம் எண் :

47

     (வி - ம்.) பொய் கூறுமியல்புடையார்க்குக் கல்விநலம் கைகூடாது;
கைப்பொருளுக்குங் கேடுவரும்; எப்பொழுதும் துன்பங்கள்
வந்தவண்ணமிருக்கும் ஆதலால் பொய்கூறாதொழிமின் என்றவாறு.

      “போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
       மீக்கொ ணகையினார் வாய்ச்சேரா-தாக்கணங்கும்
       ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம்
       பேடு கொளப்படுவ தில்”
         --நீதிநெறி விளக்கம், 26

என்பதனானும் கல்வி நலம் புலங்கெட்ட புல்லறிவுடைய பொய்யர்பாற்
சேராமையுணர்க.

     வாய்மை அறங்களுட் சிறந்ததாதல் போன்று பொய்ம்மை தீவினைகளுட்
சிறந்ததாதலின், பொய்யராகிய தீவினையாளர்க்கு இடையறாது துன்பங்கள்
வந்தண்ணமிருக்கும் என்பார், ‘நல்லில் செல்லல்களால் நலிவுண்டாம்’ என்றார்.
என்னை?

      “தீயவை தீய பயத்தலாற் றீயவை
       தீயினு மஞ்சப் படும்”         
       --குறள், 202

எனவரும் பொன்மொழியும் காண்க.                    (33)


34.          கொல்லாமை

உலகுடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின்
  நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும்
அலகிறுய ரஞ்சினுயி ரஞ்சவரும் வஞ்சக்
கொலையொழிமி னென்றுநனி கூறினர றிந்தார்.


     
(இ - ள்.) அறிந்தார் - மெய்யுணர்வுடைய சான்றோர் உலகினரை
நோக்கி நமரங்காள்! நீயிர்; உலகு உயர்சீர்த்தி உடன் விளங்க நிலை
கொள்ளின் - இவ்வுலகுள்ள துணையும் அதனோடிணைந்து நிற்கும் உயரிய
புகழொடு நின்று நிலவுதல் வேண்டுவீராயினும்; நிலை இல் கதி நானகின்
இடை நின்று - அல்லது நிலையுதலில்லாத நால்வகைப் பிறப்பினகட்பட்டுத்
தடுமாறும்; அலகில் துயர் அஞ்சினும் - துன்புற்று நெஞ்சு தடுமாறுதற்குக்
காரணமான எண்ணிறந்த துயரங்களை அஞ்சி வீடுபெற விழைதிராயினும்;
உயிர் அஞ்ச வரும் வஞ்சக் கொலை ஒழிமின் - உயிரினங்கள் பெரிதும்
அஞ்சும்படி நிகழுகின்ற கொலைத்தொழிலை ஒழித்து விடுவீராக!; என்று
நனி கூறினர் - என்று மிகவும் விதந்தெடுத்துக் கூறிப்போந்தனர்; ஆதலால்
கொலைவினையை ஒழிப்பீராக! என்பதாம்.

     (வி - ம்.) இம்மைப் பயனையும் வீடு பேற்றினையும் ஒரு சேர
அளிக்கவல்லது கொல்லாமை என்னும் நல்லறம் ஒன்றேயாகும்: ஆதலால்
எல்லீரும் அவ்வறத்தினைக் கடைப்பிடித் தொழுகுமின்! என்றவாறு.