பக்கம் எண் :

52

        “இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
         சொற்பிறக்குஞ் சோர்வு தரும்”
          --குறள், 1044

எனவும்,

        “இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
         யெல்லாருஞ் செய்வர் சிறப்பு”   
        --குறள், 752

எனவும் வருந் திருக்குறள்களானும், மன்னல் சிறிதாகி என்பதனை,

        “அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
         லற்குப வாங்கே செயல்”     
          --குறள், 333

எனவரும் திருக்குறளானும் உணர்க. ‘துறவோவிழுமிது’ என்பதனை,

        “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
         வேண்டும் பனுவற் றுணிவு”
             --குறள், 21

எனவும்,

        “துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
         திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று”  
     --குறள், 22

எனவும்,

       “இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
        பெருமை பிறங்கிற் றுலகு”
              --குறள், 23

எனவும் வருந் திருக்குறள்களானு முணர்க.                 (37)


38.         இதுவுமது

ஈண்ட லரிதாய்க் கெடுத லெளிதாகி
  நாண்ட லரிதாய் நடுக்கம் பலதரூஉ
மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை
வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே.

     (இ - ள்.) ஈண்டல் அரிது ஆய் - வந்து சேருவது மிகவும் அரியதாகி;
கெடுதல் எளிதாகி-அழிந்துபோவத மிகவும் எளியது ஆகி; நாண்டல் அரிதாய்
- நிலைப்பித்துக் கோடலும் அரிதாகி; நடுக்கம் பல தரூஉம் பலவேறு
துன்பங்களையும் தருகின்ற, மாண்பு இல் இயற்கை -
மாட்சிமையில்லாமையையே இயல்பாக உடைய; மருவு இல் -பொருத்தமற்ற;
அரும்பொருளை - பெறுதற்கரிய இவ்வுலகப் பொருள்களை: வேண்டாது
ஒழித்தார் - விரும்பாது துறந்த சான்றோருடைய; விறல் - வெற்றியே;
விழுமிது-உலகின் கண் பெறக்கிடந்த வெற்றிகளுள் வைத்துக் தலைசிறந்த
வெற்றி என்பதாம்.