பக்கம் எண் :

1
கடவுள் வாழ்த்து

1.  
உலக மூன்று மொருங்குட னேத்துமாண்
   டிலக மாய திறலறி வன்னடி
   வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந்
   தொழுவ றொல்வினை நீங்குக வென்றியான்.


       
     
(இச்செய்யுள் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணவடிகளார்
வகுத்த உரையின்கட் கண்டது.)


     இதன் பொருள் :
உலகம் மூன்றும் - மூன்றுலகத்துள்ளும் வாழும்
சான்றோரனைவரும் ஒருங்கு உடன் ஏத்தும் - ஒருசேர வாழ்த்தி
வணங்குவதற்குக் காரணமான; மாண் திலகம் ஆய-மாட்சிமை மிக்க
திலகமாகத் திகழா நின்ற; திறல் அறிவன் - ஆற்றன் மிக்க
முற்றறிவினையுடைய அருகக் கடவுளின்; அடி - திருவடிகளை தொலவினை
நீங்குக என்று என்னுடை பழவினைகள் துவரக்கெடுவனவாக என்று கருதியும்;
யான் வழுவுஇல் நெஞ்சொடு - யான் காம முதலிய குற்றங்களில்லாத தூய
நெஞ்சத்தோடிருந்து; வாலிதின் ஆற்றவும் - அதற்குக் காரணமான
நோன்பினைத் தூய்தாகப்பண்ணவும்; தொழுவல் - என் மன மொழி
மெய்களாலே தொழுது வழிபடுவேன் என்பதாம்.


     (விளக்கம்)
மூன்றுலகத்தும் வாழும் நல்லோர் ஒருங்கே வாழ்த்தி
வணங்குதற்குக் காரணமான பெருஞ் சிறப்புடைய அருகக் கடவுளின்
திருவடிகளை அடியேன் பழவினை கெடும் பொருட்டும், அவை கெடும்
பொருட்டுக் குற்றத் தீர்த்த நன்னர் நெஞ்சத்தோடிருந்து தூய்தாக அவன்
கூறிய நலல்றங்களை மேற்கொண்டொழுகவும் திருவருள் கூர்தல் வேண்டும்
என்று வணங்குகின்றேன் என்றவாறு.