பக்கம் எண் :

55

         ஐதிரண்டு கண்டங் குரைப்பவோர்
             தண்டூன்றி அறிவிற் றள்ளி
         நெய்திரண்டாற் போலுமிழ்ந்து நிற்கு
             மிளைமையோ நிலையா தேகாண்!”

எனவரும் சீவகசிந்தாமணியும் (2626)

        “நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
         நீரிற் சுருட்டு நெடுத்திரைகள்-நீரில்
         எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்ளே
         வழுத்தாத தெம்பிரான் மன்று”  
  --நீதிநெறி விளக்கம், 1

எனவரும் குமரகுருபரவடிகளார் மணிமொழியும் நினைவு கூரற்பாலன.

     இது நெஞ்சிற்குக் கூறும் வாய்பாட்டால், இவ்வாறு அற முதலியவற்றை
அறிதலின்றிப் பயன்படாமல் மூப்பதற்கு முன்பே இளமைப் பருவத்தே தவமும்
தானமும் நிகழ்த்தி உய்வீராக! வென்று செவியறிவுறுத்தபடியாம்.                                                        (40)


41.           இதுவுமது

இளமையு நிலையாவா லின்பமு நின்றவல்ல
  வளமையு மஃதேபோல் வைகலுந் துன்பவெள்ள
முளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும்
விளைநில முழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.

     (இ - ள்.) இளமையும் நிலையா - இன்ப நுகர்தற்குரிய இளமைப்
பருவமும் நிலைத்திராது; (நீரிற் குமிழிபோல அழிந்துபோம); இன்பமும் நின்ற
அல்ல - நுகரும் இன்பங்கள் தாமும் நிலைத்து நிற்குமியல்புடையனவல்ல;
வளமையும் அஃதேபோல் - அவ்வின்பத்திற்குக் காரணமான செல்வங்களும்
நிற்பனவல்ல; வைகலுந் துன்ப வெள்ளம் - அவ்வின்பம் நிலையாததோடு
வாழ்க்கையின்கண் நாடோறும் துன்பமே மிகுதியாகவும் உள்ளன; உள என
நினையாதே - ஆதலால் இளமையும் இன்பமும் வளமையும் நம்பாலுளவென்று
செம்மாந்திராமல்; விளைநிலம் உழுவார் போல் - விளைகின்ற நன்செயை
உழுகின்ற வேளாண்மாக்கள் எதிரியாண்டிற்கு அவ்விளைவினின்று விதை
கொள்ளுமாறு போலே; நீர்-நீவிரும்; செல்கதிக்கு என்றும் என்றும் -
நாடோறும் இனிச்சென்று பிறக்கின்ற பிறப்பிற்கு ஆக்கமாக; வித்து -
அறமாகிய வித்தினை; வீழ்நாள் படாமல்; செய்து கொண்மின் -
செய்துகொள்ளக் கடவீர்! என்பதாம்.

     (வி - ம்.) நீயிரிளமை முதலியவற்றால் மகிழ்ந்து வாளா விருந்து
விடாமல் இப்பொழுதே அறமுதலியன செய்து செல்லுந் தேயத்துக்கு ஆக்கஞ்
செய்து கொண்மின். அவ்விளமை முதலியன அழிந்துவிடும் என்றவாறு.