பக்கம் எண் :

57

     இனி, இத் திருக்குறட்கு, விளக்கம்போல எஞ்சிய அடிகளும்
அமைந்திருத்தலுமுணர்க. இனி, இத் திருக்குறட்கு ஆசிரியர் பரிமேலழகர்
கூறுகின்ற விளக்கவுரையும் ஈண்டுக் கருதற்பாற்று. அது வருமாறு:--

     “உடம்பென்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும்
கொள்ளப்படும்; அவற்றுள் அருவுடம்பாவது: பத்துவகை யிந்திரிய
வுணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காம வினைவிளைவுகளோடும் கூடிய
மனம் இது நுண்ணுடம் பெனவும்படும். இதன்கட் பற்று நிலையாமையுணர்ந்த
துணையான் விடாமையின் விடுதற்குபாயம் முன்னர்க் கூறுப, இவ்வுடம்புகளால்
துன்பம் இடையறாது வருதலை யுணர்ந்து இவற்றானாய கட்டினை இறைப்
பொழுதும் பொறாது வீட்டின்கண் விரைதலின்
‘உடம்பு மிகை’ யென்றார்.
இன்பத் துன்பங்களான் உயிரோடு ஒற்றுமையெய்துதலின், இவ்வுடம்புகளும்
யானெனப்படும். இதனால் அகப்பற்று விடுதல் கூறப்பட்டது” எனவரும்.
    
                                                   (42)

43.          இதுவுமது

உற்ற வுதிர மொழிப்பான் கலிங்கத்தை
  மற்றது தோய்த்துக் கழுவுத லென்னொக்கும்
பற்றினா னாகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குறு மாறே.

     (இ - ள்.) பற்றினான் ஆகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று
பறைக்குறும் ஆறு - ஒருவன் தனது பற்றுடைமை காரணமாக எய்திய
தீவினையை மீண்டும் அபபற்றுடையனாகவே நின்று தேய்த்தொழிக்கும்
முயற்சி; என ஒக்கும் - எதனை ஒக்கும் என்று வினவின்; உற்ற உதிரம்
ஒழிப்பான் - ஒருவன் தன்னாடையிலுற்ற குருதிக் கறையினைப்
போக்குவதற்கு; கலிங்கத்தை - அந்த ஆடையினை மீண்டும்; அது
தோய்த்துக் கழுவுதல் ஒக்கும் - அந்தக் குருதியிலேயே போகட்டுக்
கழுவுவதனையே ஓப்பதாம் என்பதாம்.

     (வி - ம்.) பற்றுடைமையாலுற்ற துன்பம் போக்க முயல்பவர் மீண்டும்
வேறு பொருள்களைப் பற்றுமாற்றாற் போக்கமுற்படுதல் ஆடையிற்பட்ட
குருதிக் கறையைப் போக்குபவர் மீண்டும் அவ்வாடையைக் குருதியிலேயே
தோய்ப்பது போன்று பேதைமையுடைத்து ஆதலால், பற்றறுப்போர்
விடல்வேண்டும் வேண்டியதெல்லாம் ஒருங்கு என்றவாறு.

இதனை,

       “இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
        மயலாகு‘ மற்றும் பெயர்த்து”  
          --குறள், 344

என்பதனானும் உணர்க. மேலும், பற்றினைப் பற்றுவார்க்குத்
துன்பங்கள் இடையறாதுவரும் என்பதனை,

       “பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
        பற்றி விடாஅ தவர்க்கு”
               --குறள், 347

என்பதனானும் உணர்க. (43)