பக்கம் எண் :

60
45.        மெய்யுணர்தல்

பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி
  ஒருவந்த முள்ளத் துவத்த லொழிமின்
வெருவந்த துன்பம் விடுக்குந் திறலோ
னொருவ னுலகிற் குளனென்னு மாறே.

     (இ - ள்.) வெருவந்த துன்பம் - அச்சம் வருதற்குக் காரணமான
துன்பத்தினின்றும்; விடுக்கும் கிறலோன் ஒருவன் உளன் என்னும் ஆறு -
விடுவிக்கும் பேராற்றலுடைய இறைவன் ஒருவனே உளன் என்னும்
மெய்யுணர்வு பெறுமின்; பலர் என்று எண்ணி - உலகிற்கு இறைவராவார்
பலர் என்று எண்ணியும்; பருவந்து - துன்பம் வந்துற்ற காலத்தே இவை
பிறரால் வந்த தென்று கருதி வருந்தி; உள்ளத்து உலத்தல் - இன்பம் வந்த
காலத்து இவை யாம் தேட வந்தனவென்று கருதி உள்ளத்தே மகிழ்ந்தும்
வாழ்வதனை; ஒருவந்தம் ஒழிமின் - ஒரு தலையாக விட்டொழிவீராக
என்பதாம்.

     (வி - ம்.) உலகிலுயிர்களைத் துன்பத்தினின்றும் விடுதலை செய்யும்
கடவுள் ஒருவனே என்றுணர்மின்! பலர் உளர் என்று கருதி வருந்தா
தொழிமின். இன்பம் வந்தகாலத்தே களிப்புறா தொழிமின். எல்லாம் ஊழின்
செயலென மெய்யுணர்வோடு வாழக்கடவீர்! என்பதாம்.

     இன்பதுன்பங்கள் ஊழால் வருவன ஆதலின் அவை வருங்காலத்து
மகிழ்தலும் வருந்துதலும் பேதைமை என்பது கருத்து. இறைவன் ஒருவனே
உளன்; அவனடி பற்றினவரே இன்ப மெய்துவர்; இறைவர் பலருளர் என்று
கருதி, அவ்வழியிலுழல்வோர் துன்பமேயுறுவர் என்பார். சாலப்
பலரென்றெண்ணி பருவந்து என்றார். பருவந்தும் உழத்தலும் எனல்
வேண்டிய உம்மைகள் தொக்கன. ஒருவந்தம் - ஒருதலையாக.

     இனி இச் செய்யுளோடு,

          “யாது மூரே யாவரும் கேளிர்
           தீது நன்றும் பிறர்தர வாரா
           நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
           சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
           இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
           இன்னா தென்றலு மிலமே மின்னொடு
           வானந் தண்டுளி தலைஇ யானாது
           கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
           நீர்வழிப் படுஉம் புணைபோ லாருயி்ர்
           முறைவழிப் படுஉம் மென்பது திறவோர்
           காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்