பக்கம் எண் :

61

      பெரியோரை வியத்தலு மிலமே
      சிறியோரை யிகழ்த லதனினு மிலமே”

எனவரும் கணியன் பூங்குன்றனார் செய்யுளும் கருத்துட்
பதித்தற்பாலது.
                                        (45)

46.

          பழவினை

உய்த்தொன்றி யேர்தந் துழவுழு தாற்றவும்
  வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குற லென்னொக்கும்
மெய்த்தவ மில்லான் பொருளொடு போகங்கட்
கெய்த்துழந் தேதா னிடர்ப்படு மாறே.

     (இ - ள்.) மெய்த்தவம் இல்லான் - முற்பிறப்பிலே செய்த
வாய்மையான தவத்தினை இல்லாதவன்; பொருளொடு போகங்கட்கு -
செல்வம் பெறுதற்கும் அவற்றானின்பம் நுகருதற்கும்; உழந்து எய்த்து -
பெரிதும் முயன்று இளைத்து; இடர்ப்படும் ஆறு - துன்புறும் வகை;
என் ஒக்கும் (என்னின்) - எதனை ஒக்கும் என்னின்; வித்து இன்றி -
முற்படச் சேர்த்துக் கொள்ளற்கியன்ற விதை சிறிதுமில்லாமலே; ஏர்
தந்து-உழவெருது கலப்பை முதலிய கருவிகளைக் கொணர்ந்து; உழவு
ஒன்றி - உழவுத் தொழிலிலே பொருந்தி; உய்த்து - எருதுகளைச்
செலுத்தி; ஆற்றவும் உழுது - மிகவும் ஆழமாக உழுது; பைங்கூழ்
விளைக்குறல்-பசிய பயிரை விளைக்க முயல்வதனையே ஒக்கும்
என்பதாம்.

     (வி - ம்.) பொருளும் போகமும் முற்செய் தவமுடையார்க்கே
ஆகும். அத்தவமில்லாதார் அவற்றைப் பெற முயல்வது வீணாம்
என்றவாறு. எனவே, வீடு பெறுதற்கன்றி இம்மை வாழ்விற்கும் தவமே
காரணம் ஆகும். ஆகவே எல்லோரும் தவவொழுக்கம் மேற்கொள்ளல்
வேண்டும் என்றாராயிற்று.

இதனை,

      “ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
       எண்ணிற் றவத்தான் வரும்”
            --குறள், 264

எனவும்,

      “வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
       மீண்டு முயலப் படும்”
                --குறள், 265

எனவும்,

      “இலர்பல ராகிய காரண தோற்பார்
       சிலர்பலர் நோலா தவர்”
               --குறள், 270

எனவும், வருந் திருக்குறள்களானும்,

      “மேலைத் தவத்தளவே யாகுந் தான்பெற்ற செல்வம்”

என்பதனாலுனு முணர்க.                               (46)