“செய்கபொருள்
யாருஞ் செறுவாரைச் செறுகிற்கும்
எஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணும்
ஐயமிலை யின்பமற னோடவையு மாக்கும்
பொய்யில்பொரு ளேபொருண்மற் றல்லபிற பொருளே”
எனவும்,
“தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கன்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான்”
எனவரும்
சீதத்தன் நல்லுரைகளையும் இதற்கு ஆசிரியர்
நச்சினார்க்கினியர்
‘சீதத்தன்
தான் போய்ப் பொருள்தரக் கருதினான்; அங்ஙனம் கருதிக்
கம்மியருங் களிறேறுவர்! ஆதலால் முயற்சியே நன்றென்று கருதாது வாழாதார்
வாழக் காண்டலின் முயற்சி வேண்டா அறமேயமையுமென்று கருதி
முற்பிறப்பில் நல்வினை செய்யப் பெற்றிலே மென்று நொந்து அம்முயற்சியை
வெறுத்துக் கலாய்த்திருத்தல் அறிவன்று; அதுவேயுமன்றி உள்ளமுடையான்
முயற்சியைச் செய்ய ஒருநாளே நிதிதிரளும்; அந்நிதியாலே எல்லாத்
துப்புரவுகளுமுளவாம்; அங்ஙனம் எல்லாமாகின்ற முயற்சியைவிட்டுப்
புரைபட்ட உணர்வினவர்கள், வருவது இடைத்தங்காதென்னுஞ் சொல்லான்
மடிந்திருப்பின், அவ்விருப்புப் பகைவர்க்கு ஒருதலை எடுப்புப் பெற்றாற்
போல இனிதாயிருக்கும். அங்ஙனம் அவர் தலையெடாதபடி எல்லாரும்
பொருளைத் தேடுக; தேடினாற் பகைவரைக் கொல்லும்; படை அதனை
யொழயிவில்லை, தான் அவரிடத்திருந்தேயும் பகைவரைக் கொல்லும்
அதுவன்றித் தானுளவாக இன்பத்திற்கு ஐயமில்லை ஆதலின், அறத்தோடே
முற்கூறியவற்றையும் உண்டாக்கும் மெய்யாகிய பொருளே நன்கு மதிக்கம்
பொருள். ஒழிந்த பொருள் நன்கு மதிக்கும் பொருளல்ல; ஆதலின்,
இப்பொருளைக் கொண்டு தம் குலம் நைகிறவளவிலே ஆலமரத்தின்
வீழ்போலத் தீச்சொற் பிறவாமற் றங்குலத்தைத் தாங்கல் அதனுட்
பிறந்தவருடைய கடனாகும். தங்குலத்தைத் தாங்காது போதல் பேதையரது
கடனாகும். ஆதலால் யானும் முயன்று பொருள் தேடி என் குலத்தைத்
தாங்குவேனென்று கூறி எழுந்திருந்து பண்டசாலையேறப் போந்தானென்க.”
என வகுத்துள்ள நல்லுரையையும் நனி நோக்குக.
இனி, “செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்” என்பதுபற்றிச் செல்வம்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும் என்றார். புலம்பில் பொருள் தரப்
புன்கண் உண்டோ என்பதனை,
“ஒண்பொருள்
காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு” --குறள்,
760
எனவருந்
திருக்குறளானும்,
“அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
|