பக்கம் எண் :

70

     (இ - ள்.) இப்பொருள் எங்ஙனம் ஆகியது-கணிகை மகளிர் தாம்
விரும்புகின்ற இந்தப்பொருள் யாரிடத்தினின்றும் தமக்கு வருகின்றதோ?;
அப்பொருட்கு - அந்தப் பொருட் பொருட்டாக; அங்ஙனம் ஆகிய அன்பினர்
ஆதலின் - அப்பொருள் தருவாரிடத்து அன்பு காட்டும் அயல்பினராதலாலே;
பாண்மகன் எங்ஙனம் பட்டனன் - தன்னையுடைய பாணன் எவ்விடத்தே
இறந்து பட்டனனோ அப்பொழுதே; பாண்மகற்கு அங்ஙனம் ஆகிய-மற்றொரு
பாணனுக்கு அவ்வாறே கருவியாகி விடுகின்ற; யாழும் புரைப - யாழையும்
ஒப்பாவர் என்பதாம்.

     (வி - ம்.) யாழானது தன்னையுடையான் இறந்து பட்டுழி அவனோடு
அழிந்துபடாமல் பின்னும் தன்பால் இசை தருகின்ற பிறனொரு
பாண்மகனிடத்தே சேருதல் போன்று, கணிகையரும் தமக்குப் பொருள்
வழங்கியவன் வறியவனாயவிடத்து அவன்பா லன்பு மாறி மற்றுமொரு
பொருளுடையான்பாற் சேர்வர் என்றவாறு.

     கணிகையாதலின் பாணனையும் யாழையும் உவமையாக எடுத்தனள்,
என்க.                                          
           (54)


55.      3. தீக்கடைகோல்

கரணம்பல செய்து கையுற் றவர்கட்
  கரண மெனுமில ராற்றிற் கலந்து
திரணி யுபாயத்திற் றிண்பொருள் கோடற்
கரணி ஞெலிகோ லமைவர வொப்ப.

     (இ - ள்.) கை உற்றவர்கட்கு - கணிகையர் தம்பாலெய்திய காமுகர்
திறத்திலே; பல கரணம் செய்து - அவர் இன்புறு மாற்றாலே பல்வேறு
செயல்களையும் செய்து. ஆற்றிற் கலந்து - அவர் விரும்பிய வழியிலே
இயங்கி; எனும் அரணம் இலர் - அக்காமுகர்க்குச் சிறிதும் பாதுகாவல்
ஆகாதவராய்; திண் பொருள் கோடற்கு - அவரது திண்ணிய பொருளைக்
கைகொள்ளுமாற்றால் அவரை அழித்துவிடுத லாலே; திரணி உபாயத்தில் -
சிறிய துய்யாகிய பஞ்சினை மெல்லக் கடைந்து செய்யுமொருபாயத்தாலே
அதன்கண் திணிந்த தீயினைக் கோடற்கு அப்பஞ்சினையே அழித்து
விடுகின்ற; அரணிஞெலிகோல் - தீக்கடை கோலையே; அமைவர - நன்கு
பொதுத் தன்மை பொருந்தி வரும்படி; ஒப்ப - ஒப்பாகுவர் என்பதாம்.

     (வி - ம்.) திரணி - நொய்ய பொருள். துரும்பு பஞ்சு முதலியன.
திரனியுபாயம் - தீப்பிறப்பிப்போர் நொய்ய துரும்பு முதலியவற்றைக்
குழிப்பாண்டத்திட்டுக் கடையுமொரு செயல். இவர் கடையுங்கால்
அத்துரும்புக்கு நன்மை செய்வார்போற் கடைகுவர். இங்ஙனம்
கடையுமாற்றால் அத் துரும்பினுள் நுண்ணிதாக அடங்கியிருக்கும் தீயினை
வெளிப்படுப்பர்.