பக்கம் எண் :

78

     (இ - ள்.) யார்க்கும் - எத்தகையோர்க்கும்; நனி நகை தீது -
மிகையாய நகைப்பும் தீங்கே பயப்பதாகும்; துனி நன்று பகை - துனியே
பெரும்பகையுமாம்; ஆதலால், வகை மிகுவான் உலகு எய்தி வாழ்பவர் -
பல்வேறு வகையானும் மிக்க மேனிலை யுலகத்தை எய்திவாழுந் தகுதியுடைய
மேன்மக்கள்; பணிந்தீயாரோடும் - தம் பகைவரிடத்தும்: மிகுபொருள் மிகை
- வரம்பு கடந்தொழுகும் ஒழுக்கம் மிகையாம்: நனிதீது - மிகவும் தீமை
பயப்பதாம்; என்று - என்றறிந்து; இறத்தல் இலர் - வரம்பு கடந்து
ஒழுகுதலிலர்; என்பதாம்.

     (வி - ம்.) நனி நகை தீது எனவும் மிகுபொருள் மிகைநனி தீது
என்றும் மாறிக் கூட்டுக. துனி - சிறுபகை. நன்று - பெரிது பணிந் தீயார் -
பணியாதார்; திரிசொல். பகைவர் என்றவாறு. இறத்தல் - வரம்பு
கடந்தொழுகுதல்.

     மிகையாயவழி நகையும் தீதாம், துனியே பெரும்பகையுமாம். ஆதலால்
சான்றோர் பகைவர் மாட்டும் வரம்பு கடந்து ஒழுகுதலிலர். யாவரிடத்தும்
அடக்கமாகவே ஒழுகுவர் என்பது கருத்து.

     மிகை - அடங்காமை. அஃதாவது செருக்குடைமை காரணமாக
எச்செயலினும் மிகுதிதோன்றச் செய்தல்.

     “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
      ஆரிருள் உய்த்து விடும்”   
                --குறள், 121

என்பது பற்றி, வகைமிகு வானுலகு எய்தி வாழ்பவர் மிகைமிகு
பொருளென்றிறத்தலிலர் என்று துறக்கம் புகுமியல்புடைய சான்றோர்
மேலிட்டுரைத்தனர். உரைக்கவே மிகை செய்வார் ஆரிருள் என்னும்
நிரையம் புகுவர் என்றாருமாயிற்று.                        (64)


65.          நல்குரவு

பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது
  கொண்ட விரகர் குறிப்பினி னஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை யிலராயின்
மண்டினர் போவர்தம் மக்களு மொட்டார்.

     (இ - ள்.) வெள் தறை நின்று - வறிய நிலத்திலுறைந்து; வெறுக்கை
இலர் ஆயின்-கைப்பொருள் இல்லா வறியராயவிடத்து; பெண்டிர் மதியார் -
மனைவிமாரும் நன்கு மதிப்பதிலர்; பெருங்கிளை தான் - நெருங்கிய
சுற்றத்தாரும்; அது அங்ஙனமே சிறிதும் மதியார்; கொண்ட விரகர் குறிப்பின்
அஃகுப - உறுவது சீர் தூக்கி உபாயமாகக் கேண்மை கொண்டுள்ள நண்பர்
தாமும் குறிப்பானுணர்ந்து கேண்மையிற் குறைந்து அயலாராகுவர்; தம்
மக்களும் ஒட்டார் மண்டினர் போவர் - தம்முடைய மக்கள் தாமும் ஒருசேர
வேறுபட்டகன்று போவர்; என்பதாம்.

     (வி - ம்.) இவ்வுலகின்கண் வறுமை வந்துற்றபோது மனைவிமாரும்
மதியார்; மக்களும் கைவிட்டுப் போவர்; சுற்றத்தார் மதியார்; நண்பரும்