பக்கம் எண் :

81

       கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி
       விடாஅ ருலகத் தவர்”

எனவரும் நாலடியானுமுணர்க.                            (67)


68.          இதுவுமது

பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்
  அருளி லறனு மமைச்சி லரசு
மிருளினு ளிட்ட விருண்மையிது வென்றே
மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப.

     (இ - ள்.) பொருள் இல் குலனும் - செல்வமில்லாதவருடைய குலப்
பெருமையும்; பொறைமை இல் நோன்பும் - பொறுமைப் பண்பில்லாதவன்
மேற்கொண்ட தவமும்; அருள் இல் அறனும் - நெஞ்சத்தின்கண்
அருட்பண்பில்லாதவன் செய்த அறச்செயலும்; அமைச்சு இல் அரசும் -
அமைச்சரில்லாத அரசாட்சியும்; இருளினுள் இட்ட இருள்மையிது என்று -
இருளினூடே கண்ணிலெழுதப்பட்ட கரிய மை போல்வனவாம் என்று; மருள்
இல்புலவர் மனம் கொண்டு உரைப்ப - மயக்கமில்லாத புலவர்கள்
மனத்தினெண்ணிக் கூறாநிற்பர் என்பதாம்.

     (வி - ம்.) குலம் - குடிப்பெருமை, நோன்பு - தவம்.

     அறத்திற்கு அருளுடைமையே காரணமாகலின், அருளாதான் செய்யும்
அறம் அறமாகாதென்பது பற்றி அருளில் அறம் என்றார். இதனை,

     “தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
      னருளாதான் செய்யு மறம்”                
 --குறள், 349

எனவருந் திருக்குறளானுமுணர்க.

வறுமை குலப்பெருமையை அழிந்துவிடும் என்பதனை,

     “தொல்வரவுந் தோலுங் கெடுக்குத் தொகையாக
      நல்குர வென்னு நசை”  
                  --குறள், 1043

எனவும்,

     “இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
      சொற்பிறக்குஞ் சோர்வு தரும்”    
           --குறள், 1044

எனவும் வருந் திருக்குறள்களானு முணர்க.

இன்னும்,

     “குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
      பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉ
      நாணணி களையு மாணெழில் சிதைக்கும்
      பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
      பகிப்பிணி என்னும் பாவி”  
         --மணிமே, 19:76 - 80