காமம்
வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய் --குறள், 390
என்றோதுதலும் காண்க.
இனி
மூன்று குற்றம் என்பதற்குப் பௌத்தர் துறவோர்க்கு மட்டுமே
உரிய குற்றங்களாகக் கூறுகின்ற அவாவும் பற்றும் பேதைமையும் ஆகிய
மூன்றும் எனினுமாம். என்னை?
குலவிய
குற்றமெனக் கூறப் படுமே
அவாவே பற்றே பேதைமை யென்றிவை
--மணி, 30 : 149 - 70
என்றும் ஓதுபவாகலான்.
இது
பேதைமை முதல் பன்னிரண்டாக விரித்துக் கூறியதனை
மூன்றாகத் தொகுத்தோதியபடியாம் இவற்றை ஆசிரவம் என்றும் கூறுப.
என் வாய்க்குற்ற சொல்லின் வழு என்றது. அறியாமை காரணமாக
இயல்பாகவே என் வாய்க்குப் பொருந்திய சொற்குற்றம் என்றவாறு. (2)
|
மனந்தூயோர்க்கே
இன்பமுளவாகும் எனல்
|
3.
|
வாயுவினை
நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல்
தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம். |
(இ
- ள்) மாண்டவய நாவாய் - மாண்புடைய
வலிமை மிக்க
மரக்கலங்கள்; வாயுவினை நோக்கி உள - தமது இயக்கத்திற்குக்காற்றினையே
பெரிதும் அவாவிருப்பனவாகும்; வாழ்க்கை - உயி்ர்களின் வாழ்வு தானும்;
ஆயுவினை நோக்கி உள - தமக்கென ஊழ் வகுத்த அகவையையே
குறிக்கொண்டிருப்பனவாம்; அது போல் அங்ஙனமே; துப்புரவும்
எல்லாம் - பொறிகளானுகரப்படும் நுகர்ச்சிகளும் பிறவுமாகிய
நன்மைகளெல்லாம்; தீயவினை நோக்கும் - தீவினையை நயந்து நோக்கும்
நோக்கமும்; இயல் சிந்தனையும் - அத்தீவினை செய்தற்குரிய நெறிகளிலே
செல்கின்ற நினைவும்; இல்லாத் தூயவனை - தன்பாற் சிறிதுமில்லாத
தூய்மையுடைய சான்றோனையே: நோக்கி உள - தாம் எய்துதற்குரிய
இடமாக எதிர்பார்த் திருப்பனவாம் என்பதாம்.
(வி
- ம்) மரக்கலங்கள் தமக்கு ஆதாரமாகக் காற்றை
எதிர்பார்த்திருப்பது போலவும், உயிரினங்களின் வாழ்வுகளெல்லாம்
தத்தமக்கு ஊழ் வரைந்துள்ள வாழ்நாளையே ஆதாரமாகக்
குறிக்கொண்டிருப்பது போலவும். இவ்வுலகத்துள்ள இன்பங்களும் புகழ்களும்
தீவினை செய்தற்கண் ஆர்வமும் அவ்வழியியங்கும் எண்ணங்களும்
சிறிதுமின்றி மனத் தூயனாகிய நல்லோனையே தமக்கு ஆதாரமாகக்
கொண்டுள்ளன என்றவாறு.
எனவே
மனந்தூயரல்லாதர்க்கு இவ்வுலகத்து இன்பமும் பிற நலங்களும்
உளவாகா என்பது கருத்தாயிற்று. ஆகவே இம்மை யின்பங்
|