பக்கம் எண் :

10

 

 யாக்கை நிலையாமை

7.

போதர வுயிர்த்த வாவி
   புகவுயிர்க் கின்ற தேனு
மூதிய மென்று கொள்வ
   ருணர்வினான் மிக்க நீரா
ராதலா லழிதன் மாலைப்
   பொருள்களுக் கழிதல் வேண்டா
காதலா னழுது மென்பார்
   கண்ணனி களைய லுற்றார்.

     (இ - ள்.) போதர உயிர்த்த ஆவி - உடம்பினின்றும்
வெளியேறுவதற்கு விடுகின்ற மூச்சானது; புக உயிர்க்கின்ற தேனும் -
மீண்டும் காற்று உட்புகுதற் பொருட்டே விடப்படுகின்ற தாயினும்;
உணர்வினான் மிக்க நீரார் ஊதியம் என்று கொள்வர் - அங்ஙனம்
அக்காற்று மீண்டும் உட்புகுவதனை மெய்யுணர்வினின் மிக்க பெரியோர்
ஒரு பேறாகவே கருதாநிற்பர்; ஆதலால் அழிதன்மாலைப்
பொருள்களுக்கு அழிதல் வேண்டா - அங்ஙனமாதலால்
அழியுமியல்புடைய உடம்பு முதலியவற்றின் அழிவிற்கு நெஞ்சழிந்து
வருந்துதல் வேண்டா; காதலால் அழுதும் என்பார் - இவ்வுடம்பின் கண்
பற்றுடைமையாலே அதன் அழிவிற்கு ஆற்றாது அழுவேம் என்று
கருதுபவர், கண் நனி களையல் உற்றார் - தம் கண்களை வாளா
வருத்துபவரே யாவர் என்பதாம்.

     (வி - ம்.) வெளியேறிய மூச்சு மீண்டும் உட்புகாமற் போயே
விடுதலும் கூடும். ஆதலால் மெய்யுணர்வுடையோர் தாம் உள்வாங்கும்
ஒவ்வொரு மூச்சும் தமக்கு ஊதியமாகவே கருதுகின்றனர். அத்துனை
நிலையாமையுடையது இவ்வுடம்பு. இதன் அழிவுக்கு வருந்துதல்
வேண்டா. இதன் அழிவு கருதி அழுபவர் வீணே தம்மை
வருத்துபவரேயாவர் என்றவாறு.

     சான்றோர் உயிர்க்கும் மூச்சு மீண்டும் உட்புகுவதனை ஊதியமாகக்
கருதற்குக் காரணம் பின்னும் பிழைத்திருந்து அதனாலாய பயன் கோடல்
கருதியேயாம். பின்னும் வாழ்வேம் என்னும் அவாவாலன்று என்க.

     இனி இச்செய்யுளோடு,

         “நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
          புல்லறி வாண்மை கடை”               --குறள், 331
எனவும்,

         “நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
          பெருமை யுடைத்திவ் வுலகு”             --குறள், 339
எனவும்,