பக்கம் எண் :

15

 


யாக்கையின் இழிதகைமை

11.

நன்கன நாறுமி தென்றிவ்
   வுடம்பு நயக்கின்ற தாயி
னென்பது வாயில்க டோறு
   முண்ணின் றழுக்குச் சொரியத்
தின்பதொர் நாயு மிழுப்பத்
   திசைதொறுஞ் சீப்பில்கு போழ்தி
னின்பநன் னாற்ற மிதன்க
   ணெவ்வகை யாற்கொள்ள லாமே.

     (இ - ள்.) இது நன்கனம் நாறும் என்று - இது நன்றாக நறுமணம்
கமழ்கின்றது என்று பாராட்டி; இவ்வுடம்பு நயக்கின்றது ஆயின் - இந்த
உடம்பு நம்மாற் பெரிதும் விரும்பப்படுமானால்; ஒன்பது வாயில்கள்தோறும்
உள்நின்று அழுக்குச் சொரிய - மற்றிவ்வுடம்பே அதன்கண் அமைந்த கண்
முதலிய ஒன்பது தொளைகளின் வழிகளானும் அதனகத்தினின்றும் தீ
நாற்றமிக்க அழுக்குகள் ஒழுகா நிற்பவும்; தின்பது ஓர் நாயும் - அதனைத்
தின்னுமியல்புடைய நாய்கள்; திசைதொறும் இழுப்ப - தம்முள் கலாம்
கொண்டு வாயாற் கௌவி நாற்றிசைகளினும் இழுத்தலாலே; சீபில்கு
போழ்தின் - இவ்வுடம்பினின்றும் சீழ்வடிகின்ற பொழுது; இதன்கண் இன்ப
நல் நாற்றம் எவ்வகையால் கொள்ளலாம் - இவ்வுடம்பின்கண்
மனமின்புறுதற்குக் காரணமான நறுமணத்தை எவ்வாற்றால் யாம் எய்துதல்
கூடும்? கூறுமின்! என்பதாம்.

     (வி - ம்.) இவ்வுடம்பு இயற்கையாகவே அருவருக்கத்தக்க தீ நாற்றம்
உடையதேயாம்; இதன்கண் செயற்கையாலுண்டாகிய நறுமணத்தை அதன்
மணமாகவே கருதி அறிவிலிகளாற் பாராட்டப்படுகின்றது. அதனியற்கை தீ
நாற்றமே என்பதனை அதன்கண் அமைந்த ஒன்பது தொளைகளும்
சொரிகின்ற அழுக்காலும் உயிர் போயவழி நாய் முதலியன பற்றி யிழுக்க
அவ்வுடம்பினின்றும் ஒழுகும் சீ முதலியவற்றாலும் உணரலாம். ஆதலால்
இவ்வுடம்பு விரும்பத்தகுந்த சிறப்பொன்று மில்லாதது என்பதாம்.

இதனோடு,

   “எழுகு றும்பி பெருகு காதை வள்ளை யென்ப ரிகழ்கரும்
    புழுவ டர்ந்த குழலி ருண்ட புயல தென்பர் பூளைநீ
    ரொழுகு கண்கள் குவளை யென்பர் தரள மென்ப ருயிரொடும்
    பழுது றும்பல் லென்பை யின்ன பகர்வ தென்ன பாவமே”

எனவும்,