சிந்தாமணி,
சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி என்னும் இவற்றை ஐம்பெருங்காப்பியங்கள்
என்று சான்றோர்
போற்றிக்கூறுவர், இவற்றுள் முன்னின்ற மூன்று காப்பியங்களும்
முழுவுருவத்துடன் கிடைத்துள்ளன. இம்மூன்று காப்பிங்களானும்
நந்தமிழ்மொழி ஒப்பற்ற பெருமையுடையதாகத் திகழ்கின்ற தென்பதில்
சிறிதும் ஐயமில்லை ஈற்றினின்ற வளையாபதி குண்டலகேசி என்பவற்றுள்
ஒரு சில செய்யுள்கள் ஒழியப் பெரும்பகுதிகளும் அழிந்தொழிந்தன
இம்மாபெருங் காப்பியங்கள் அழிந்தமை தமி்ழ்மாந்தரின் தவக்குறைவே
என்றுதான் கருதவேண்டும். தோன்றியன வெல்லாம் அழிவனவே என்பது
நியதியேயன்றோ?
வளையாபதி,
குண்டலகேசி என்னும் காப்பியங்கள் இருந்தன
என்பதன் கண்ணும் நமக் கையமுண்டாகாதபடி அப்பெரு நூல்களின்
செய்யுள்கள் மேற்கோள்களாகப் பண்டைச் சான்றோரால்
கையாளப்பட்டமையாலே நிலைத்திருந்து அவையிருந்தமைக்குச் சான்றாகித்
திகழ்கின்றன. அவற்றுள் வளையாபதியைப்பற்றி இந்நூலின் முற்பகுதியில்
எம்மால் எழுதப்பட்ட அணிந்துரை கண்டு தெளிக. இனி இக்
குண்டலகேசியைப்பற்றி யாமறிந்தவற்றை ஈண்டுக் கூறுவாம்.
குண்டலகேசி என்பது பௌத்தமதச் சார்புபற்றி அம் மதத்திற்றாப்
பெரும் பகையாக விருந்த ஆருகத சமயக் கொள்கைகளைக் குற்றங்கூறி
அவ்வாருகத மதத்தின் இறுமாப்பையடக்க வெழுந்தவொரு சொற்போர்
நூலே என்பது ஆராய்ச்சியாற் புலனாகின்றது.
ஆருகத சமயம்பற்றி, ‘நாதகுத்தனார்’
என்னும் ஆசிரியரோடு
‘ஆவனும்’ என்னும்
நகரத்திலே ‘குண்டலகேசி’
என்பவள் சொற்போர்
செய்து அவ்வாசிரியரைத் தோற்கச் செய்து பௌத்த சமயத்தை வளர்த்தனள்
என்பதும், அவள் வைதிக சமய முதலிய வேறு பல சமயக் கணக்கரோடும்
சொற்போர் செய்து வென்று தன் சமயத்தைப் பெருக்கினள் என்பதும்
‘நீலகேசி’ என்னும்
நூலால் இனிது விளங்கும்.
‘நீலகேசி’
என்னும் நூல் தானும் குண்டலகேசி ஆருகத
சமயத்திற்குக் கூறிய குற்றங்களை நீக்குவதனையும் அக் குண்டலகேசியாற்
பரப்பப்பட்ட பௌத்த சமயக் கொள்கைகளுக்குக் குற்றங்கூறி மீண்டும்
ஆருகத சமயக் கொள்கைகளை நிலைநிறுத்துதற்கும் எழுந்த நூலேயாம்
என்பதனை அதனை ஓதுவோர் எளிதின் உணருவர்.
மேற்கூறிய நீலகேசியினின்றும்
வேறு சில நூல்களினின்றும் இற்றை
நாள் நமக்கு முழுவுருவத்திற் கிடைத்துள்ள செய்யுள் பத்தொன்பது மட்டுமே.
இப்பத்தொன்பது செய்யுட்களையல்லாமல் நீலகேசியின் உரையாசிரியராகிய
‘சமயதிலாகர வாமன முனிவர்’
தமதுரையிற் குறிப்பிட்டுள்ள 99
செய்யுள்களின் முதனினைப்புக்களும் உள்ளன. இவர் காட்டும்
இக்குண்டலகேசியின் முதனினைப்புடைய செய்யுள்கள் தத்தம் மகத்தே
அக்கருத்துக்களைக்கொண்டிருந்தன என்பதனையும் அவருரையை ஆழ்ந்து
பயில்வோர் உணர்தல் கூடும். அந்த முதனினைவுகளை மட்டும், ஈண்டுக்
காட்டுவாம். அவையாவன : --
|