எடுத்து ஒவ்வொன்றாகக் கூறிவந்தான். அவற்றிற்கெல்லாம் நீலகேசி
விடைகூறி மொக்கலனைத் தோற்பித்தாள் என்றே கூறக் காண்கின்றோம்
இவ்வுண்மையைச் சிறப்பாக நீலகேசி 284, 5, 9, 7, 8 ஆகிய ஐந்து
செய்யுளாலும் பொதுவாக மொக்கலவாதச் சருக்கத்தில் எஞ்சிய
செய்யுள்களாலும் நன்குணரலாம். எனவே மேற்காட்டப்பட்ட செய்யுள் முதற்
குறிப்பனைத்தும் குண்டலகேசியினின்றும் எடுத்து உரையாசிரியரால் நீல
கேசியுரையிற் குறிக்கப்பட்டவைகளே என்பது துணிவாம்.

     இனி, நீலகேசியாசிரியர் தம் நூலில் புத்தமதம் முதலாகப் பூதவாத
மதம் ஈறாக ஒன்பது சமயங்களை மறுத்துள்ளாராயினும் பௌத்த சமயத்தை
மறுப்பதே அவருடைய முதன்மையான குறிக்கோள் என்பதனை
அச்சமயத்திற்காக அவர் நான்கு சருக்கங்களை வகுத்துக்கொண்டமையானும்,
குண்டலகேசிக் காப்பியத்தை மறுப்பதன் பொருட்டே அவர்
குண்டலகேசியையும் அவட்கு ஆசிரியனான அருக்கச் சந்திரனையும்
அவனுக்கு ஆசிரியனான மொக்கலனையும் அவனுக்கு ஆசிரியனான
புத்தனையும் தம் நூலில் வலிந்திழுத்துப் பாத்திரமாக்கிக்
கொண்டிருக்கின்றனர் என்பதையும் இங்ஙனம் மற்றையோரையும்
பாத்திரமாக்கியது நூலின்கண் ஒரு சருக்கம் பெரும் பகுதியைக்
கவர்ந்துகொள்ளாமைப் பொருட்டும் பயில்வோர்க்குச் சுவைமிகுதற்
பொருட்டுமேயாம் என்பதனையும் நீலகேசியை ஓதும் நுண்ணுணர்வுடையோர்
எளிதில் உணர்வார் என்க.

     இனிக் குண்டலகேசி என்பவள் குண்டலகேசி என்னும் காப்பியத்
தலைவியாவாள். இவளுடைய வரலாற்றையும் யாம் நீலகேசியுரையாலே
தான் ஒரு சிறிது உணர முடிகின்றது. இக்குண்டலகேசியின் வரலாறாக
நீலகேசியுரையாசிரியரான சமய திவாகரர் கூறுவது வருமாறு :--

     “குண்டலகேசி” யென்பாளொரு வைசிய கன்னிகை. இவள் ஒருநாள்
பிரசாதத் தலத்து (மாளிகையில்) விளையாடுகின்றாளாக. ஒரு கிதவப வைசிய
வைசிய புத்திரன் (குற்றவாளியாகிய செட்டி மகன்)
‘காளன்’ என்பான்,
இவன் பௌத்த தரிசனங்கொண்டு பல வழியும் சோரவிருத்தி (களவுத்
தொழில்) பண்ணிச் செல்வானை அரசன் வதிக்க (கொல்ல) வென்றேவச்
சிறைப்பட்டுச் செல்வானை, முன்சொன்ன குண்டலகேசி கண்டு காமப்
பரவசையாக (காமுற்றவளாக :), அதனை அறிந்து அவளுடைய பிதா (தந்தை)
ராசாவைக் கண்டு யாதனுமோருபாயத்தால் மீட்டு இவனுக்குக் குண்டலகேசி
யென்னும் கன்னிகையினை விவாகவிதியாற் கொடுத்தினிது செல்கின்ற
காலத்து ஒருநாள் பிரணய கலகத்து நர்மோக்தி காலத்து (ஊடன்மிகுதியால்
சினந்திருந்தபொழுது) “நீ கள்வனன்றோ?” என்று குண்டலகேசி சொல்லக்
காளனும் தன்னுள்ளத்தே சினங்கொண்டு பின்பொருநாள் வித்தியாசாதன
வியாசத்தால் (வித்தை பயிற்றுவல் என்னுமொரு காரணங் காட்டி) இவளைத்
தனிக்கொண்டு ஒருபர்வதத்தேறி நீ என்னை யிவ்வாறு சொல்லுதலில்
யானுன்னைக் கொல்லத் துணிந்தேன் என்னக் குண்டலகேசியும்

“நற்கொல்லியை முற்கொல்லிய” என்பதற்றே இவனை யான்
கொல்வேனென நினைந்து “யான் சாகிறேனாகி லும்மை வலங்கொண்டுசாவல்”
என, அதற்கியைந்த காளனை வலங்கொள்கின்றாள். வரையினின்றும் விழ
நூக்கினள் (உந்தினள்). நூக்கன் காளனும் புத்த ஸ்மரணத்தால் (நினைவால்)
மோக்ஷித்தான் (வீடு பெற்றான்) குண்டலகேசியும் பர்த்ரு (கணவன்) விரஹ
துக்கிதையாகித் துறப்பேனென் நினைத்துப் பரசமயங்களெல்லாம் நாவல்
நட்டுச் சயித்துப் பௌத்த தரிசனம் கொண்டு முத்தி பெற்றனள்? என்பதாம்.