வைத வைவின் - (பெரியோர்கள்) சாபமிட்டு வைது சொல்லும் வசவுச் சொல் உடனே பலிப்பது போல; மராமரம் ஏழ் தொளை எய்த-ஏழு மாமரங்களும் எய்தவுடனேயே தொளைபடும்படி; எய்வதற்கு எய்திய மாக்கதை-அம்பு எய்தவனுக்கு அமைந்த பெருமை மிகு கதையை; செய்த செய்தவன்-ஆதிகாவியமாக இயற்றிய தவ முனிவனாகிய வான்மீகியின்; சொல் நின்ற தேயத்தே-வாக்கு நிலை பெற்றிருக்கின்ற இந்த நாட்டில்; நொய்தின் நொய்ய சொல்-எளிமையினும் எளிமையான சொற்களால்; நூற்கலுற்றேன் - இந் நூலை இயற்றத் தொடங்கினேன்; எனை-என்னே வியப்பு! நொய்ம்மை: மென்மை. எளிமை. இங்கே நொய்ய சொல். கருத்தூற்றமற்ற வெள்ளைச் சொல்லைக் குறித்தது. நிறைமொழி மாதர் அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் உடன் பலிக்கும். விளைவு குறித்தது இவண் வந்த உவமை. இராமபிரானின் திறம்பற்றிய நம்பிக்கை பற்றிச் சுக்கிரீவன் மனத்தில் ஐயம் தோன்றியபோது ஏழு மராமரங்களை ஒரே கணை எய்து. கணத்தில் துளைத்துக் காட்டிய செயல் இங்கே நினைவூட்டப்படுகிறது. இராமபிரானின் கதை சொல்லுதற்கு வான்மீகி முனிவர் பெருந்தவம் செய்திருக்க வேண்டும்; இக் குறிப்பினை ‘மாக்கதை செய்த செய்தவன்’ என்ற தொடர் தருகிறது. ஏழு என்பதன் இறுதிக் குற்றியலுகரம் தொக்கு. ‘ஏழ்’ என நின்றது. நூல் என்பது உவமையாகு பெயராகக் காப்பியத்தைச் சுட்டிற்று. என்னை என்ற வியப்புச் சொல் இடைக் குறைந்து எனை (என்னை வியப்பு) என நின்றது. 5 |