கண்ணிடைக் கனல் சொரி களிறு- (கோபத்தால்) கண்களிலே நெருப்பைச் சொரியும் ஆண்யானைகள்; கால் கொடு மண்ணிடை வெட்டுவ- கால்களால் நிலத்தை வெட்டுவனவாம்; வேட்கை மைந்தர்தம்- பார்ப்பவர் விரும்பும் அழகிய இளைஞர்களின்; பண்ணைகள் பயில் இடம்- விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள்; குழி படைப்பன- குழிகளை உடையனவாம்; அக்குழிகளைச் சுண்ணம் தொடர்ந்து தூர்பன- அந்தக் குழிகளை அவ்விளைஞர் அணிந்த வாசனைப் பொடிகள் தூர்ப்பனவாகும். இளங் குமரர்கள் யானைகளை உடன் கொண்டு சென்று விளையாடுவர். அந்த யானைகள் நிலத்தைக் காலால் வெட்டி குழி செய்கின்றன. அக் குழிகள் வாசனைப் பொடிகளால் தூர்க்கப்படுகின்றனவாம். பண்ணை - விளையாட்டு. 44 |