அரங்கிடை மடந்தையர் ஆடுவார்-நடன அரங்குகளிலே பெண்கள் நடனம் ஆடுவார்கள்; அவர கருங் கடைக்கண் அயில்- அவர்களின் கருமையான கடைக்கண்களாகிய வேல்கள்; காமர் நெஞ்சினை உருங்குவ- காதல் மிக்க ஆடவர்களின் மனத்தை உருக்குவனவாம்; மற்று அவர் உயிர் அன்னவர் மருங்குல் போல்- பின்னும் அவ்வாடவரின் உயிர்கள் அப்பெண்களின் இடைகளைப் போல; தேய்வன- மெலிவனவாகும்; வளர்வது ஆசை- அந்த மைந்தர்களுக்கு அம்மகளிரின் மீது ஆசை பெருகுவதாகும். நடன அரங்கில் நடனமாடும் மகளிரின் பார்வை அவர்களது காதலர்களான ஆண்களின் உயிரை உண்ணும். அம்மைந்தர்தம் உயிர் அம்மகளிரது இடையென மெலியும். ‘உறங்குவ’ என்பது ‘உருக்குவ’ என்பதன் மெலித்தல் விகாரம். உருங்குதல்: உண்ணுதல் என்றும் பொருள் கொள்ளலாம். இதனை “அரவின் உடலுயிர் உருங்குவணம்” என்று பரிபாடலாலும் (பரி. 4: 42) அறியலாம். 46 |