பொழுது உணர்வு அறிய- பொழுதை அறிவதற்கு அரிய; அப் பொழுவுஇல் மாநகர்-அந்த ஒப்பற்ற பெருநகரில் உள்ள; தொழு தகை மடந்தையர்- (கற்பின் சிறப்பால்) எல்லோரும் வணங்கத்தக்க பெருமையுள்ள பெண்களது; சுடர்விளக்கு என பழுதுஅறு மேனியை- ஒளி விளக்கு போன்ற. குற்றம் எதுவுமின்றித் திகழும் உடம்புனை; பார்க்கும் ஆசை கொல்-பார்க்க விரும்பும் ஆசையால்தானே; எழுது சித்திரங்களும் இமைப்பு இலாத- எழுதிய ஓவியங்களும் கண்களை இமைக்காதனவாய் உள்ளன. பொழுது உணர்வரிய: அந்நகரத்துப் பெண்களின் அணிகலன்களின் ஒளியால் இரவா? பகலா? என்று உணர இயலாத மிக்க ஒளியுடைய நகராதலால் இவ்வாறு கூறினார். “நல்லார் அணிகலம் பகலைச் செய்ய” சிந்தாமணி (2500) ஒப்பு நோக்கத்தக்கது. அடுத்த பாடலில் (143) மகளிர் மேனிக்கு விளக்கை உவமையாக்குதல் காண்க. ஓவிய உருவங்கள் கண்களை இமைக்காமல் இருப்பதற்கு. அயோத்தி மகளிரின் பழுதறு மேனியைப் பார்க்கும் ஆசைபோலும் எனக் காரணம் கூறியதால் இது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி. 50 |