சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்- மாலை சூடிய மகளிர் (வாடிவிட்டன என்று) இகழ்ந்து எறிந்துவிட்ட மாலைகள்; ஆடுவார் புரவியின் குரத்தை ஆர்ப்பன- ஆடுகின்ற நெடிய குதிரைகளின் குளம்புகளைப் பிணிப்பனவாகும்; ஊடல் ஊடு உறக் கூடுவார் - புலவி இடையிலே நிகழ. பின் ஆடவருடன் கூடி மகிழும் மகளிர்; வனமுலை கொழித்த சாந்தம் - அழகிய தனங்களிலிருந்து வழித்து வீதியில் எறிந்த சந்தனத் தேய்வை; ஓடுவார் இழுக்குவது - அத்தெருவில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்வனவாம். மகளிர் தாம் அணிந்த மாலைகள் வாடினவென வீசியெறிய அவை குதிரைகளின் கால்களைப் பிணிக்கும். அம்மகளிர் வழித்து எறிந்த சந்தனக் குழம்பு வீதியில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்யும். குரம்: குளம்பு ஆர்த்தல்: பிணித்தல் (கட்டுதல்). “கோதை மடவார்தம் கொங்கை மிசை திமிர்ந்த சீதக் களபச் செழுஞ் சேற்றால் வீதிவாய் மானக்கரி வழுக்கும்” என்ற நளவெண்பா ஒப்பு நோக்கத்தக்கது (1: 13) 56 |