விலக்க அருங்கரி மதம்- விலக்குவதற்கு அரிய யானைகளின் மத நீர்; வேங்கை நாறுவ- வேங்கை மலர்களைப் போல மணக்கிறது; குலக்கொடி மாதர்வாய் குமுதம் நாறுவ - உயர்குடியில் பிறந்த கொடியை ஒத்த மகளிரின் வாய்கள் குமுத மலர் போல் விளங்குகின்றன; கலக்கடை களிப்ப அரும் கதிர்கள் நாறுவ - அம்மகளிரின் அணிகலன்களில் அளவிடற்கு அரிய ஒளிக் கதிர்கள் எங்கும் ஒளிர்கின்றன; மகளிர் கூந்தல் மலர்க்கடி நாறுவ- அந்த மகளிரின் கூந்தல் மலர் மணம் கமழ்கிறது. யானைகளின் மத நீர் வேங்கை மலர் மணம் வீசுகிறது. உயர் குலப் பெண்களின் வாய் குமுத மலர்களைப் போல் விளங்குகிறது. அவர்கள் அணிந்துள்ள அணிகலன்களின் ஒளி எங்கும் ஒளிர்கின்றன. அம்மகளிரின் கூந்தல் மலர் மணம் கமழ்கிறது என்றார். வேங்கை மலர்ந்திருக்கும் போது. புலி போலத் தோன்றும். அதனைப் புலி என்று கருதி யானை அம்மரத்தைத் தாக்கும் அதனால் மலர்கள் யானைமீது சிந்த. அம்மலர் மணம் படிந்து - மத நீரை அந்த மணம் உடையதாகச் செய்யும் என்பர். 58 |