பக்கம் எண் :

  நகரப் படலம்103

152.அதிர் கழல் ஒலிப்பன; அயில் இமைப்பன;
கதிர் மணி அணி வெயில் கால்வ; மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன; முத்தம் மின்னுவ;
மதுகரம் இசைப்பன; - மைந்தர் ஈட்டமோ

 

அதிர்கழல்   ஒலிப்பன -  அந்நகரத்திலே  அதிர்கின்ற  வீரக்
கழல்களின்  ஒலி  ஆர்ப்பரித்து ஒலிப்பனவாக; அயில் இமைப்பன-
வேல்  முதலிய  படைக்கலங்கள்  ஒளிர்வனவாக;  கதிர்மணி அணி
வெயில்  கால்வ
- ஒளிமிக்க  மணிகளாலான  அணிகலன்கள் எங்கும்
ஒளிவீசுபவையாக; மான்மதம்  முதிர்வு  உறக் கமழ்வன-  கத்தூரி
மிகுதியும் கமழ்வதாக; முத்தம் மின்னுவ- அணிகலன்களில் அமைந்த
முத்துக்கள்   மின்னல்   போல  ஒளிர்வன;  மதுகரம்  இசைப்பன-
வண்டுகள்   பண்  பாடுவனவாக; மைந்தர்  ஈட்டமே-  (இவ்வாறாக)
ஆடவர் கூட்டம் விளங்கியது.

மைந்தர்    ஈட்டம் கழல் ஒலிக்க. அயில் இமைக்க. வெயில் கால.
கமழ்வனவாக.  முத்தம்மின்ன.  மதுகரம்  இசைக்க  இழுத்தன எனக்
கொண்டு கூட்டி முடிக்க.

மதுகரம்:  தேனைச் சேகரிக்கும் வண்டுகள்; முத்தம்: முத்து மாலை
முதலிய  அணிகள்;  மான்  மதம்: கத்தூரி மானிடமிருந்து கிடைக்கும்
மணப்பொருள்.                                           60
 

153.வளை ஒலி. வயிர் ஒலி. மகர வீனையின்
கிளை ஒலி. முழவு ஒலி. கின்னரத்து ஒலி.
துளை ஒலி. பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி.- கடல் ஒலி மெலிய. விம்முமே.
 

வளை ஒலி வயிர் ஒலி- (அந்த நகரமெங்கும்) சங்குகளின்  ஓசை.
கொம்புகளின் ஓசை; மகர வீணையின்  கிளை  ஒலி-  மகர   யாழ்
இனங்களின்  ஓசை;  முழவு ஒலி கின்னரத்து  ஒலி- மத்தள  ஓசை.
கின்னர  ஓசை; துளை  ஒலி-  துளைக்  கருவிகளான  புல்லாங்குழல்
முதலியவைகளின் ஓசை;  பல்இயம்  துவைக்கும்-  மற்றும் பலவகை
வாத்தியங்கள்  முழக்கும்; சும்மையின் விளைவு ஒலி- ஆரவாரத்தின்
விளைவாக உண்டாகும் ஓசை; கடல் ஒலி மெலிய விம்மும்- (ஆகிய
இவ்வோசைகள் எல்லாம்) கடல் முழக்கமும் மெலியும்படி ஒலிக்கும்.

அயோத்தி     நகரமெங்கும் சங்கு முதலியவைகளின் ஒலி.  கடல்
முழக்கம்  கீழ்ப்பட  மேலோங்கி  முழங்கும் என்கிறார். வளை:  சங்கு.
வீணையின்  கிளை:  வீணையின்  இனம். கின்னரம்: ஒருவகை   யாழ்.
துளை:   துளைக்   கருவிகள்   (ஆகுபெயர்).  சும்மை:    பேரொலி.
துவைக்கும்: முழக்கும்.                                     61