பக்கம் எண் :

104பால காண்டம்  

154.மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்.
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்.
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்.
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.

 

மன்னவர்  தரு   திறை   அளக்கும்  மண்டபம் - (மன்னர்
மன்னனாகிய   அயோத்தி  வேந்தனுக்கு   அடங்கிய)    சிற்றரசர்கள்
செலுத்தும் கப்பத்தை எண்ணி  அளவிடும் மண்டபங்களும்;  அன்னம்
மென்   நடையவர்   ஆடு   மண்டபம்  
-  அன்னம்  போன்ற
நடையையுடைய நடன மாதர்கள்  நடனம்   ஆடும்   மண்டபங்களும்;
உன்னரும்  அருமறை  ஓதும்  மண்டபம்   -    நினைப்பதற்கும்
அரியனவான சிறந்த வேதங்களை வல்லோர்  ஓதும்   மண்டபங்களும்;
பன்னரும் கலைதெரிபட்டி மண்டபம் -  சிறப்பித்துப்  பேசுவதற்கும்
அரியனவான பல கலைகளையும்    அறிஞர்கள்   ஆராயும்    பட்டி
மண்டபங்களும் (அயோத்தி நகரெங்கும் இருந்தன).

அரசியல்   கடமைகள். கலைத் துறைப் பணிகள். சமயத்  தொண்டு.
அறிவு  நலம் வளர்க்கும் ஆய்வு ஆகப் பலவற்றுக்கும்  அயோத்தியில்
வெவ்வேறு   மண்டபங்கள்   இருந்தன   என்பது   கவிஞர்  செய்தி.
பட்டிமண்டபம்  என்றாலே  கேலிக்கூத்தாகவும்  பொழுதுபோக்காகவும்
கருதுகிறோம். அது சரியன்று. தணிகைப் புராணம்   பட்டிமண்டபத்தின்
இயல்பினைக்  கூறுவது  காண்க:  “கரிசறு கவிக்குக் கவி.  கமகனுக்குக்
கமகன்.  வாதிக்கு  ஒரு வாதி- துரிசறு வாக்கி தனக்கொரு  வாக்கியாய்
அவர்  தொன்று  தொட்டு  அமைந்து- வரிசையின் வந்த  வேள்வியர்
பெறாது  வரும்இகல்  கடந்த  எஃகு உடையார்- பரிசில்  நூற் பயிற்சி
இன்பு  எனக்  கலை  தேர் பட்டி மண்டபம் பல வயங்கும்.  (தணிகை.
திருநகரம் 106).                                          62
 

155.

இரவியின் சுடர் மணி இமைக்கும். தோரணம்;
தெருவினின் சிறியன. திசைகள்; சேண் விளங்கு
அருவியின் பெரியன. ஆனைத் தானங்கள்;
பரவையின் பெரியன. புரவிப் பந்தியே.

 

தோரணம் இரவியின் சுடர்மணி இமைக்கும் - அந்த  நகரத்துத்
தோரணங்கள்   சூரியன்  போன்ற  சுடர்மிகு  மணிகளால்    ஒளிரும்;
திசைகள் தெருவினின் சிறியன - நெடிய  வீதிகளைவிடத்  திசைகள்
சிறியனவாம்; சேண்விளக்கு   அருவியின்   பெரியன    ஆனைத்
தானங்கள்
- மலையின்  மிக  உயர்ந்தே  இருக்கும்   அருவியை விட
யானையின்  மதநீர்  பெரியதாகும்;  பரவையின் பெரியன   புரவிப்
பந்தி
-கடல்களை விடவும் பெரியது. அந்நகரத்தில் குதிரைகள்  கட்டும்
இடம்.

திசைகள் தெருவினில் சிறியன என்றது உயர்வு நவிற்சியின்  எல்லை.

தானம்:  மதநீர்;  பந்தி:  குதிரை கட்டும்  லாயம்;   சேண்: உயரம்;
சுடர்மணி வினைத்தொகை.                                 63