முழங்கு திண் கடகரி - பிளறி முழக்கமிடும் வலிமைமிக்க மத யானைகளின் மீது; மொய்ம்பின் உலாவும்-தமது மிகுந்த வலிமையால் ஏறி ஊர்ந்து சென்றும்; எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும்- எழுகின்ற ஆரவாரமுடைய குதிரைகளோடு தேர்களில் ஏறி ஊர்ந்து சென்றும்; பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர - வறுமைத் துன்பத்தோடு வந்து இரந்தவரது துன்பம் நீங்கிட; வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மாநகர் - வேண்டிய பொன்னும் வாரி வழங்கியும் அந்தப் பெரு நகரில் வாழும் சிலர்க்குப் பொழுது போகும். யானை மீதும். குதிரை மீதும். ஏறிச் சவாரி செய்தும். தேர் ஓட்டியும் வருந்தி வந்தவருக்கு வாரி வழங்கியும் சிலருக்குப் பொழுதுபோகும் என்று கூறியதால் ஆண்களுக்குப் பொழுது போக்கும் செயல்களைக் கூறினார் எனலாம். குரத்தம்: ஆரவாரம். முழங்குதல்: முழக்கமிடுதல். மொய்ம்பு: வலிமை. பழங்கண்: வறுமைத் துன்பம். தீர்தர: தீர. யானையேற்றம்- குதிரையேயேற்றம்- தேர் ஏற்றம் போன்றவை அரசருக்குரியவை. இளவரசர்களும் அந்நகரத்துச் செல்வ இளைஞர்களும் பொழுதுபோக்கிய செயல்களைக் கூறினார் போலும். 67 |