ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள்-அந்நகரின் குறைவில்லாத மாடங்களின் மீது ஆடுகின்ற கொடிகள்; நானாவிதமா நளி மாதிர வீதி ஓடி - நாலாவிதமாகவும் பறந்து பெரிய வான வீதியிலே ஓடி; மீன் நாறு வேலைப்புனல்- மீன் நாறும் கடல் நீரினை; வெண் முகில் உண்ணுமா போல- வெண்மை நிறமுடைய மேகங்கள் பருகுவது போல; மீப் போய் - மேலே சென்று; வான் ஆறு நண்ணி - வானாறாகிய ஆகாய கங்கையை அடைந்து; புனல்வற்றிட நக்கும்- அதன் தண்ணீர் வற்றும்படி நக்கும். அந்த நகரத்து மாடங்களின் மீது ஆடும் கொடிகள் வானவிதியிலே மேலே சென்று மேகங்கள் கடல் நீரைப் பருகுவது போல ஆகாய கங்கையின் நீர் வற்றும்படி நக்கும் என்றார். நானா விதமா: நாலா விதங்களிலும். ஆனாத: குறையாத. மீப் போய்: மேலே சென்று. வானாறு: ஆகாய கங்கை. மன்னோ: அசை. கொடிகளின் சிறப்பை உயர்த்திக் கூறியதால் உயர்வு நவிற்சி அணி. 70 |