அலைகடல் நடுவண்-அலைகள் மிகுந்துள்ள பாற்கடல் நடுவே; ஓர் அனந்தன் மீமிசை- ஒப்பற்ற ‘அனந்தன்’ எனும் பாம்பணை மேலே; மலை என விழிதுயில் வளரும்- கரியமலை போல. கண்வளர்கின்ற; மாமுகில்- பெரிய மேகம் போன்ற (நிறமும். செயலுமுடைய) திருமால்; ‘கொலை தொழில் அரக்கர் தம் கொடுமை திர்ப்பென்’. என்று- உயிர்களைக் கொல்லுதலே தொழிலாக உடைய அரக்கரின் கொடுமையைத் தீர்ப்பேன் என்று; உலைவு உறும் அமரருக்கு- அவ்வரக்கர்களால் வருந்தும் தேவர்களுக்கு; உரைத்த வாய்மையை- சொன்ன வாக்குறுதியை முந்திய பாடலில் ‘எண்ணினான்’ என்பதனுடன் “வாய்மையை” என்பது முடிகிறது. அலைகடல் என்று பொதுவாகக் கூறினாலும். திருமாலின் உறைவிடமான ‘பாற்கடல்’ என்று பொருள் உரைக்கப்பட்டது. மீமிசை: உருபின் மேல் உருபு வந்து ‘மிக மேலே’ என்ற பொருள் தந்து நின்றது. ‘மலை’ என்ற பொதுச்சொல்லும் திருமாலைக் குறிப்பதாதலின் ‘கரியமலை’ என்ற பொருளை உடையதாயிற்று. தேவர்களுக்கு அரக்கரால் மரணமில்லை என்பதை உணர்த்த ‘அமரர்’ என்றார். அமரர்: மரணமற்றவர். வல்மை: வாக்குறுதி. அடுத்து வரும் 23 பாடல்கள் தேவர்களுக்குத் திருமால் வாக்குறுதி அளித்த செயலை விரித்துரைப்பனவாகும். 6 |