வடவரைக் குடுமியின் நடுவண் - மேருமலையின் சிகரத்தின் மத்தியிலே; மாசு அறு சுடர்மணிமண்டபம் துன்னி - குற்றமற்ற ஒளிமிகுந்த மணிகளாலமைந்த மண்டபத்தை அடைந்து; நான்முகக் கடவுளை அடிதொழுது- (அங்கு வந்து சேர்ந்த) பிரமனை அடிவணங்கி; அமரகண்டகர்- தேவர்களுக்குப் பகைவர்களான அரக்கரது; இடிநிகர் வினையம் அது- இடிபோன்ற அக்கொடும் செயல்களை; இயம்பினான்- சொல்லலானான். வடவரை: மேருமலை. தேவர்கள் தன்னைக் காணவருவதை அறிந்த நான்முகன் மேருமலைச் சிகரத்தில் - மணிமண்டபத்தில் வந்து தங்கியிருந்தான். தேவர்கள் உடன்வர. சிவபெருமான் அங்குச் சென்று அரக்கர்தம் கொடுஞ்செயலைக். கூறினார் என்பது கருத்து. மாசறு சுடர் மணிமண்டபம்: தேவர்கள் கூடி ஆலோசிக்கும் மண்டபம். கண்டமுகம்: முள் அரக்கர்கள் முள் போன்று துன்பம் விளைவிப்பவர் என்பதால் ‘கண்டகர்’ என்றார். வினை: செயல். ‘அம்’ சாரியை பெற்று ‘வினையம்’ என வந்தது வரை: இருமடி யாகு பெயராய் மலையைக் குறித்தது. அரோ: அசை. 8 |