அடல் மேக நாதன்- (இராவணனது மகனாகிய) வலிமை மிகுந்த மேக நாதன் (இந்திரசித்து) எனுமரக்கன்; புகுந்து பாக சாதனன் தனை- (அமராவதி நகரக்குள்) புகுந்து தேவர்கள் தலைவனான இந்திரனை; பாசத்து ஆர்த்து - கயிற்றால் கட்டி; இலங்கை மேய நாள்- இலங்கைக்குக் கொண்டு போன போது; போக மா மலை உறை புனிதன் - இன்பம். தரும் அழகிய தாமரையில் வாழும் புனிதனாகிய பிரமன். தான்; மீட்டமை தோகை பாகற்கு உற - அந்த இந்திரனை மீட்டுவந்ததை உமையொருபாகனாகிய சிவபெருமானுக்குப் பொருந்த; சொல்லினான்- எடுத்தியம்பினான். பாக சாதனன்: இந்திரன் (புண்ணிய பலன்களை உயிர்கள் பெற உதவுபவன்) மேகநாதன்: பிறந்ததும் மேகத்தைப் போல முழங்கியதால் இப்பெயர் பெற்றான் என்பர். இந்திரனைப் போரில் வென்றபின் பெற்ற சிறப்புப் பெயரே “இந்திரசித்து” என்பது. மேகநாதனிடமிருந்து இந்திரனைத் தான் மீட்டுவந்ததை. நான்முகன். சிவன் முதலானவர்களுக்குச் சொன்னான் என்பது கருத்து. 9 |