கறைமிடற்று இறையும்- நீலகண்டனாகிய இறைவனும்; தாமரைச் செழும்தவிசு உவந்த அத்தேவும்- தாமரையாகிய செழித்த ஆசனத்தனை விரும்பி அமர்ந்திருக்கும் நான்முகனும்; அடிமிசை விழுந்தனர்-திருமாலின் திருவடிகளை வணங்கி; விண்ணுளோரொடும்- தேவர்களொடும்; எழுந்தனர் எதிர் சென்று-எழுந்தவர்களாகி. அங்குத் தோன்றிய திருமாலுக்கு எதிரே சென்று. அவரை; தொழும்தொறும் தொழும் தொறும்-துதித்துத் தொழும் போதெல்லாம்; களிதுளங்குவர்- மகிழ்ச்சியால் ஆடுவாராகி நின்றனர். சிவபெருமானும். நான்முகனும். தேவர்களும் திருமாலுக்கு எதிரே சென்று அடிதொழுது. துதித்து. தொழும் போதெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்து ஆடுவாராயினர் என்பது கருத்து. கறை: நஞ்சு. மிடறு: கண்டம். கறைமிடற்றிறை: சிவபிரான். தேவு: தெய்வம். அடிமிசை: மிசை ஏழனுருபு. துளங்கல்: அசைதல் இங்கு ஆடுதலைக் குறித்தது. இறை: ஈசன் தலைவன் மேம்பாடுடையவன் என்னும் பொருள் கொண்டது. கறைமிடற்றிறை என்பதற்கு மாறாகக் கடவுளர்க்கு இறை என்ற பாடமும் உண்டு. 13 |