பொன்வரை இழிவதோர் புயலின் பொற்பு உற - பொன் மலையாகிய மேருவிலிருந்து கீழே இறங்குகின்ற ஒரு மேகத்தின் அழகுதோன்ற; என்னை ஆள் உடையவன் தோள் நின்று- என்னை ஆளாக ஆட்கொண்டிருக்கும் கலுழனுடைய தோள்களில் இருந்து; வான்தடவும் சென்னி மண்டபத்தில் சேர்ந்து - ஆகாய மளாவிய சிகரத்தை உடைய அம் மண்டபத்தை அடைந்து; அரிதுன்னு பொற்பீடமேல் - சிங்கவடிவுடைய பொன் ஆசனத்தின் மேல்; எம்பிரான் பொலிந்து தோன்றினான்- எம்பெருமானாகிய திருமால் பொலிவுறத் தோன்றலானான். பெரிய திருவடி என்றழைக்கப்படும் திருமாலின் ஊர்தியான கருடனை “என்னை ஆளுடையவன்” என்று சிறப்பிக்கிறார். ‘பொன்வரை’ என்று கூறுவதால் கருடனது நிறமும் மேன்மையும் புலனாகும். அரிதுன்னு பொற்பீடம்: சிங்காதனம். ‘தேவர்கள் இருந்த இடத்தில் வந்து காட்சிதந்த திருமால் கருடனது தோளிலிருந்து இறங்கி அம்மண்டபத்தே இடப்பட்ட சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்’ என்பது கருத்து. தோள்: பிடர் அரி: சிங்கம் (எல்லா மிருகங்களையும் அழிக்க வல்லது) 15 |