மசரதம் அனையவர் - கானல் நீரைப்போன்றவர்களாகிய அரக்கர்களுடைய; வரமும் வாழ்வும்- வரபலத்தையும். வாழ்வையும்; நிசரத கணைகளால் நீறு செய்ய- எமது குறிதவறாத அம்புகளால் சாம்பலாக்க (அழிக்க); யாம் கசரத துரகமாகக் கடல் கொள்காவலன்- யாமே. யானை. தேர். காலாள் என்னும் கடல் போன்ற நாற்பெருஞ்சேனைகளையுடைய வேந்தனான; தசரதன் மதலையாய் தாரணிவருதும்- தயரதன் புத்திரனாக உலகத்தில் வந்து அவதரிக்கின்றோம். மசரதம்: பேய்த்தேர் (கானல்நீர்). நிசரதம்: உண்மை. நிசரத கணை: உண்மையான அம்புகள் (பொய்யாது தாக்கவல்லது). நீறு: சாம்பல். நீறு செய்தல்: அழித்தலாம். தாரணி: பூமி. பத்துத் தேர் கொண்டு. தன்னுடன் போர்புரிந்த சம்பானை வென்றவன் என்பதால் “தசரதன்” என்று பெயர் பெற்றான் என்பர். தசம்: பத்து. ரதன்: ரதங்களை வென்றவன். வெஞ்சினத்து அவுணர் தேர்பத்தும் வென்றுளேன்” என்பது தயரதன் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதாகும். மதலை: விழுது. புதல்வருக்கு ஆகிவந்தது உவமையாகுபெயர். வருதும்: தன்மைப் பன்மை வினைமுற்று யாம் வருதும் என முடியும். 21 |