ஆறாவது பாட்டுத் தொடங்கி. இருபத்து எட்டாம் பாட்டுவரை கூறப்பட்ட நிகழ்ச்சி யாவும். திருமால் முன்பு தேவர்களுக்கு அருள் செய்ததனை வசிட்டன் தனது மனத்தில் சிந்தித்தனவாகும். ஈதுமுன் நிகழ்ந்தவண்ணம் -இது முன்பு நிகழ்ந்த செய்தியாகும்; எனமுனி இதயத்தெண்ணி - என்று. வசிட்டன் மனத்தில் நினைத்து (மன்னனைப்பார்த்து); மாதிரம் பொருத திண்தோள் மன்ன! - திசை எங்கும் சென்று போர் செய்து வென்ற. வலியதோள்களை உடைய மன்னனே!; நீ வருந்தல்- நீ (புத்திரப் பேற்றை எண்ணி) வருந்தாதே; ஏழ் ஏழ் பூதலம் முழுதும் தாங்கும்-ஈரேழாக எண்ணப்படும் உலகம் யாவையும்காக்கும்; புதல்வரை அளிக்கும் வேள்வி - புத்திரர்களைத் தரவல்ல வேள்வியை; தீதறு முயலின் ஐய! சிந்தை நோய்தீரும் என்றான்- குற்றமின்றி நீமுயன்று செய்தால் ஐய! நின்மனத் துயர் நீங்கும் என வசிட்டன் கூறினான். வண்ணம்: விதம். இதயம்: மனம். திருமால் தேவர்களுக்கு அருளிய திறத்தை எண்ணிய வசிட்டமுனி. தயரதனை நோக்கி ஈரேழு உலகையும் காக்கவல்ல புதல்வர்களைத் தரவல்ல வேள்வியை நீ முயன்று செய்தால் உனது மனத்துயர் தீரும் என்றான் என்பது கருத்து. மாதிரம்: திக்குகள். பொருத: போர் செய்து வென்ற. திண்தோள்: வலிய தோள். 29 |