முறைமுறை அன்பினால் ஆர்த்தனர் - (நகர மக்களும் பெண்களும்) முறையாகக் கூடி அன்பின் மிகுதியால் ஆரவாரித்தனர்; உடல் புளகம் போர்த்தன - எல்லோருக்கும் உடல் புளகத்தால் மூடப்பட்டன; வேர் பொடித்த - வியர்வை பெருகியது; சொல்லினார்க்கு எலாம் நீள்நிதி எதிர் எதிர் தூர்த்தனர்- பிள்ளைகள் பிறந்த செய்தியைச் சொன்னவர்களுக்கெல்லாம் எதிர் எதிரே நிறைந்த செல்வத்தை வாரி வழங்கினர்; அவர்தம் சிந்தை தீர்த்தனன் என்று அறிந்ததே - அந்த நகர மக்களின் மனம் (வந்து பிறந்தது) வணங்கத்தக்க பெருமான் என்பதை அறிந்தது போலும். ‘முறை முறை’ பலமுறையாக என்னும் குறிப்பு. புளகம்: மயிர்க்கூர்சசெறிதல் ‘இதனைப்’ புளகாங்கிதம் என்பர். வேர்: வியர்வை. பொடித்த: பொடித்தன (தோன்றின). நிதி: செல்வம். தூர்தல் மறைத்தல் (மூடுதல்). செல்வத்தால் நிலத்தையே மறைத்தனர் என்பது கருத்து. எதிர் எதிர்: ஒருவருக்கொருவர் எதிராக நின்று என்பதும் பொருளாம். தீர்த்தன்: தூயவன் வழிபடத் தக்க திருமாலே வந்து தோன்றினான் என அறிந்ததோ ‘ஓ’ வியப்புப் பொருள் தந்து நின்றது. சிந்தை: மனம். அயோத்தி நகர மக்கள் அளவற்ற பெரு மகிழ்ச்சி அடைந்தனர். ‘திருமாலே அவதரித்தான் என அவர்கள் மனம் அறிந்ததோ’ என்கிறார். ஆர்த்தனர் என்றதால் வாக்கும். அன்பினால் என்றதால் மனமும். வேர் பொடித்தன என்பதால் உடலும் மகிழ்ந்தது கூறப்பட்டன என்க. ‘ஏ’ அசை. நீள் நிதி: பண்புத் தொகை. 114 |