பண்ணையும் ஆயமும் - பெண்கள் கூட்டத்திலும் தோழிகள் கூட்டத்திலும்: திரளும் பாங்கரும் - ஆண்கள் கூட்டத்திலும் தோழர் கூட்டத்திலும்; கண் அகன்திரு நகர் - இடமகன்ற அந்த அழகிய நகரத்திலே; களிப்புக் கைமிகுந்து- மகிழ்ச்சி மேலிட்டு; எண்ணெயும். களபமும். இழுதும். நானமும். -எண்ணெய். கலவைச் சாந்து. வெண்ணெய் புழுகு வகைகளையும்; சுண்ணமும் - பரிமளப் பொடி வகைகளையும்; வீதி தோறும் தூவினார் - ஒவ்வொரு வீதியிலும் தூவினார்கள். பண்ணையும் திரளும். ஆயமும் பாங்கரும் என வேறுபாடு தோன்றக் கூறியது கருதத்தக்கது. கண் அகன்: ஒரு பொருட்பன்மொழி. கைமிகல்: அதிகப்படுதல். திருநகர்: அழகிய நகரம். எள்+நெய்: எண்ணெய் எனினும் எல்லா வகைகளையும் குறித்து நின்றது: நாணம்: புனுகு (கஸ்தூரியுமாம்). சுண்ணம்: பரிமளப் பொடி. மன்னனுக்கு மைந்தர் பிறந்த மகிழ்ச்சியால் வீதிதோறும் எண்ணெயும். களபமும். இழுதும். நானமும் தூவி மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர் என்பது குறிப்பு. ‘’எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட’’ என்ற பெரியாழ்வார் பாசுரம் நினைவுகூரத்தக்கது. மூன்று பாடல்களாலும் வள்ளுவர் பறையறை செய்தியும் நகர மாந்தர் மகிழ்வும் கூறப்பட்டது. 115 |