கரா மலைய-ஒரு முதலை காலைக் கவ்விக் கொண்டு வருத்த; தளர் கைக்கரி - அதனால் சோர்வுற்ற துதிக்கையை உடைய யானையான கஜேந்திரன்; அரா அணையில் துயில்வோய் என - பாம்பணையில் துயில்பவனே என அழைக்க; அந்நாள் விராவி அளித்தருள் -அந்த நாளிலே விரைந்து அந்த முதலையை அழித்து யானையைக் காத்தருளிய; மெய்ப்பொருளுக்கு - உண்மைப் பொருளான அப்பரமனுக்கு; ‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனர் - இராமன் என்னும் பெயரை (வசிட்டன்) சூட்டினான். கரா: முதலை. தளர் கரி: வினைத்தொகை. எய்த்தல்: இளைத்தலுமாம். அராஅணை: அரவணை (பாம்புப் படுக்கை). விராவி: சேர்தலுமாம். அராஅணைத் துயில்வோய் என விளித்து தான் பன்னாள் துன்புறவும் அது பற்றிக் கவலை உறாமல் உறங்குகின்றாயே பெருமானே என்ற குறிப்புடையது. மெய்ப்பொருள்: உண்மைப் பொருளாகிய பரமன். ராமன்: அழகன். அன்றே: அசை. 117 |