பொய் வழியில் முனி - பொய் நெறியில்லாத முனிவனாகிய வசிட்டன்; புகல்தரு மறையால் - கூறப்படும் மறை நெறிப்படியே; இவ்வழிப் பெயர்கள் இசைத்துழி -இந்த விதமாகக் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய பின்னர்; இறைவன் கைவழி நிதி எனும் நதி - மன்னனுடைய கைகளில் வழியே பெருகி வரும் செல்வமாகிய ஆறு; கலை மறையோர் மெய்வழி உவரி - கலைகளில் வல்ல அந்தணாளர்களின் மனங்களாகிய கடலை; மேன்மேல் நிறைத்தன - மேலும் மேலும் நிறையச் செய்தன. பொய்வழி: பொய்யான நெறி. முனி: பற்றற்றவன். மறையால்: மறை நெறிப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து. உழி: காலப்பொருள் தந்து நின்றது. மெய்வழி: மெய்நெறி. உவரி: கடல் மெய் நெறி நிற்கும் அந்தணாளர்களின் மனமாகிய கடல் என்பது பொருள். பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டிய பின்னர் பெரியோர்களுக்குத் தானம் செய்தான் என்பது கருத்து. நிதியை நதியென்றதற்கேற்ப. மனத்தைக் கடல் என்று உருவகம் செய்தது பொருத்தமாகும். உருவக அணி. தயரதன் தான நீருடனே கொடுத்த அளவற்ற செல்வம் அற்தணர்களின் மனத்தை நிறைவாக்கியது என்பது கருத்து. 121 |