அமிர்து உகு குதலையொடு- அமுதும் போன்ற மழலை மொழி பேசியும்; அணி நடை பயிலா - அழகான தளர் நடை பழகியும்; திமிரம் அது அறவரு - இருள் நீங்க உதித்து வருக்கின்ற; தினகரன் எனவும் - சூரியனைப் போலவும்; தமரம் அது உடன் வளர் - ஒலியுடன் வளர்ந்து வருகின்ற; சதுர்மறை எனவும் - இருக்கு முதலான நான்கு வேதங்களைப் போலவும்; நிலமகள் குறைவு அற -நிலமகளின் குறைகளெலாம் நீங்குமாறு; குமரர்கள் வளர்நாள் -இராமன் முதலிய குமாரர்கள் நால்வரும் வளர்ந்து வரும் நாளிலே. அமிர்து உகு: உகுதல் இங்கு உவமை: உருபுப் பொருளில் வந்தது. அமிர்தம் போன்ற என்பது பொருள். குதலை: மழலை மொழி. இதனைப் பொருள் நிரம்பாத சொற்கள் என்பர். அணிநடை: அழகான நடை. இங்குத் தளர்நடையைக் குறிக்கும். பயிலா: பயின்று செய்யா என்ற வாய்ப்பாட்டு வினையெச்சம். திமிரம்: இருள். தினகரன்: சூரியன்; தினத்தைச் செய்பவன் என்பது பொருளாம். ‘நான்மறை’ நான்கு பிள்ளைகளுக்கும் உவமையாயின. தமரம்: ஒலி. வேதம் எழுதப்படாதது என்பதால் ஒலிக்கின்ற வேதம் என்று பொருள் தொனிக்க ‘தமரமதுடன் வரு சதுமறை’ என்றார். பகையிருளை ஒழிக்கும். திறனுடையவரென்பதால் இருள் நீக்கும் தினகரனை உவமை கூறினார். நால்வராய் இருந்து உலகுக்கு நன்மை கூறுதலால் நான்மறை உவமை. இதனால் குமரர்களின் வளர்ச்சி கூறப்பட்டது. 123 |